விடுவிக்கப்பட்ட 42 படகுகள் நிலை அறிய தமிழக அதிகாரிகள், மீனவர் குழு இன்று இலங்கை சென்றது

தமிழ் முரசு  தமிழ் முரசு
விடுவிக்கப்பட்ட 42 படகுகள் நிலை அறிய தமிழக அதிகாரிகள், மீனவர் குழு இன்று இலங்கை சென்றது

நாகை: கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், படகுகளை பறிப்பதும், வலைகளை அறுத்து அடித்து விரட்டுவதும் தொடர்ந்து வருகிறது.   இலங்கை அரசு மீனவர்களை விடுவித்தாலும் படகுகளை விடுவிப்பதில்லை. மேலும், எல்லை தாண்டி அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தது, தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியதாக படகுகள் மீது இலங்கை ஊர்காவல்துறை, திருகோணமலை, பருத்தித்துறை நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், மத்திய அரசு பரிந்துரையின்பேரில் இலங்கை அரசு முதல்கட்டமாக 2015ம் ஆண்டில் பறிமுதல் செய்த ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்களின் 42 படகுகளை விடுவிப்பதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜூலை 15ம் தேதி அந்த படகுகள் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு, படகுகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவும் இலங்கை அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து 42 படகுகளும் விடுவிக்கப்பட்டு அதற்கான ஆணை இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், 42 படகுகள் இலங்கையில் என்ன நிலையில் உள்ளது, என்ன தேவை என்பதை அறிய மீன்வளத்துறை அதிகாரிகள் கூடுதல் இயக்குனர் சமீரான், உதவி இயக்குனர் மற்றும் மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர், மீனவர் சங்க தலைவர் சேசுராஜ், மெக்கானிக் ஆல்வின் பெர்னாண்டோ, புதுக்கோட்டையிலிருந்து மீனவர் விஜயகுமார், நாகையிலிருந்து எழிலரசன் உள்பட 7 பேர் கொண்ட குழு மதுரையிலிருந்து இன்று விமானம் மூலம் கொழும்பு புறப்பட்டனர்.

இதேபோல் காரைக்கால் மாவட்டத்திலிருந்து மீன்வளத்துறை துணை இயக்குனர் இளையபெருமாள், கோட்டூச்சேரி மீனவர் சிவக்குமார் ஆகியோர் சென்னையிலிருந்து விமானம் மூலம் இலங்கை தலைநகர் கொழும்பு சென்றனர்.

.

மூலக்கதை