இந்தியாவுக்கு எதிராக படுதோல்வி: இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் மாற்றம்? அறிக்கை அளிக்க அமைச்சர் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவுக்கு எதிராக படுதோல்வி: இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் மாற்றம்? அறிக்கை அளிக்க அமைச்சர் உத்தரவு

கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா, 3-0 என்ற கணக்கில், இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது.

படுதோல்விக்கான காரணங்களை அறிந்து கொள்ள, இலங்கை கிரிக்கெட் வாரியம் (எஸ்எல்சி) அறிக்கை அளிக்க வேண்டும் என, இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் தயசிறி ஜெயசேகரா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தயசிறி ஜெயசேகரா கூறுகையில், ‘’இலங்கை அணியின் திறன்கள் கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை.



இந்தியா உலகின் மிக வலுவான அணி என்பதும் தெரியும். ஆனால் தோல்விக்கான காரணங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்’’ என்றார்.

எஸ்எல்சி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதன் தலைவர் பதவியில் இருந்து சுமதிபாலா விலக வேண்டும் என இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தயசிறி ஜெயசேகரா கூறுகையில், ‘’தேர்வு செய்யப்பட்ட குழுவை (எஸ்எல்சி) மாற்ற முடியாது.



அடுத்த தேர்தலில் மட்டுமே அதை செய்ய முடியும்’’ என்றார். இந்தியா-இலங்கை அணிகள் அடுத்ததாக 5 ஒரு நாள், ஒரே ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முதல் ஒரு நாள் போட்டி வரும் 20ம் தேதி நடைபெறுகிறது.

.

மூலக்கதை