புதிய மெட்ரோ ரெயில் கொள்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

PARIS TAMIL  PARIS TAMIL
புதிய மெட்ரோ ரெயில் கொள்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பற்றி நிதி மந்திரி அருண்ஜெட்லி நிருபர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், “புதிய மெட்ரோ ரெயில் கொள்கைக்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை வழங்கி உள்ளது. இது மெட்ரோ திட்டங்களுக்கு தனியார் முதலீடுகளுக்கான பெரிய சாளரத்தை திறந்து விடும். புதிய மெட்ரோ ரெயில் திட்டங்களைப் பொறுத்தமட்டில், மத்திய உதவியைப் பெறுவதற்கு தனியார்துறையும், பொதுத்துறையும் இணைந்து செயல்படுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும், “பெரிய அளவில் முதலீடு தேவைப்படுகிற மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு தேவைப்படுகிற பெரும் நிதி ஆதார தேவைகளை சந்திப்பதற்கு, தனியார் முதலீடு மற்றும் பிற புதுமையான வடிவங்கள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.

மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்

புதிய மெட்ரோ ரெயில் கொள்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* மத்திய நிதி உதவியை எதிர்பார்க்கிற அனைத்து மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு, முழுமையான அல்லது சில கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு (தானியங்கி கட்டண சேகரிப்பு, செயல்பாடு மற்றும் சேவைகளின் பராமரிப்பு போன்றவை) தனியார் துறை பங்களிப்பு அத்தியாவசிய தேவை ஆகும்.

* தற்போது கடைசி மைல் இணைப்பு போதிய அளவு கிடைக்காத நிலையில், மெட்ரோ ரெயில் நிலையங்களின் இரு பக்கங்களிலும் ஊர்தி சேவைகள், நடைபாதை அமைப்பு, சைக்கிள் செல்ல பாதை அமைப்பு, துணை போக்குவரத்து வசதிகளை அளித்தல் ஆகியவற்றை சம்மந்தப்பட்ட மாநிலங்கள் கவனித்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

புதிய மெட்ரோ ரெயில் திட்டங்களை முன்மொழிகிற மாநிலங்கள் இவற்றுக்கான முதலீட்டு திட்டங்கள் குறித்து குறிப்பிட வேண்டும்.

திட்ட அறிக்கையில் தெளிவு

* புதிய மெட்ரோ ரெயில் கொள்கை, புதிய மெட்ரோ ரெயில் திட்டங்களை தீவிரமாக மதிப்பீடு செய்வதற்கு உதவுவதாக அமைந்துள்ளது. மேலும், சுதந்திரமான மூன்றாம் தரப்பு மதிப்பீடு செய்வதற்கு நகர்ப்புற போக்குவரத்து நிறுவனம், திறன் மேம்பாட்டு மையங்கள் போன்றவற்றை அடையாளம் காண புதிய மெட்ரோ ரெயில் கொள்கை பரிந்துரை செய்கிறது.

* மெட்ரோ ரெயில் திட்டங்களின் நிதி நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக புதிய மெட்ரோ ரெயில் கொள்கையானது, நகர்ப்புற நிலங்களில் வர்த்தகம் மற்றும் சொத்து வளர்ச்சிக்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை, அதிகபட்ச கட்டணம் அல்லாத இதர வழிமுறைகளுக்கு அதாவது, விளம்பரங்கள் மூலம் வருவாய் உருவாக்குதல், இடங்களை குத்தகைக்கு விடுதல் பற்றி திட்ட அறிக்கையில், தெளிவாக குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு புதிய மெட்ரோ ரெயில் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் சேவை

தற்போது நாட்டில் சென்னை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, ஜெய்ப்பூர், குருகிராம், கொச்சி என 8 நகரங்களில் 370 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

சென்னையில் 107.50 கி.மீ. தொலைவிலான மெட்ரோ ரெயில் திட்டம் 2-வது கட்டம் உள்பட நாடு முழுவதும் 13 நகரங்களில் 595 கி.மீ. தொலைவிலான மெட்ரோ ரெயில் சேவை பணிகள் பல்வேறு கட்டத்தில் உள்ளன.

உயர்நிலை, மேல்நிலை கல்வி நிதி

மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள்:-

* உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்காக ‘மத்யமிக் மற்றும் உஷாதர் ஷிக்‌ஷா அறக்கட்டளை நிதி’ என்ற பெயரில் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி அறக்கட்டளை நிதி உருவாக்கப்படும். இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி கூடுதல் வரி வசூல் சேர்க்கப்படும். இந்த நிதி, நாடு முழுவதும் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி கற்கிற மாணவர்களின் நலன்களை பேணுகிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.

* பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தில் முதன்மை இயக்குனர் பணி இடங்கள் 7, இயக்குனர் பணி இடங்கள் 36 உருவாக்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

* சரக்கு, சேவை வரி விதிப்பில் இருந்து காஷ்மீர், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு 2027-ம் ஆண்டு, மார்ச் மாதம் வரையில் விலக்கு அளிப்பதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் வழங்கியது.

மூலக்கதை