காலில் ஷூவுடன் கொடி ஏற்றியதற்காக கல்லூரி முதல்வரை தாக்கிய பா.ஜனதா மாணவ அமைப்பினர்

PARIS TAMIL  PARIS TAMIL
காலில் ஷூவுடன் கொடி ஏற்றியதற்காக கல்லூரி முதல்வரை தாக்கிய பா.ஜனதா மாணவ அமைப்பினர்

தெலுங்கானா மாநிலத்தில் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள ஐலாப்பூரில் இளநிலை கல்லூரியில் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக் கொடி கல்லூரி முதல்வர் முகமது யாகீன் என்பவரால் ஏற்றப்பட்டது. அவர் கொடி ஏற்றிய சமயத்தில் காலில் ஷூ அணிந்திருந்தார். அவர் கொடியை ஏற்ற முயன்ற போது அங்கிருந்த அகில பாரத வித்யார்த்தி பரிஷத் என்னும் பாரதீய ஜனதாவின் மாணவர் அணியை சேர்ந்த ஒரு மாணவர்கள் அவரை ஷூவை கழற்றுமாறு குரல் எழுப்பினார். உடனே பல மாணவர்களும் கோஷம் எழுப்பினார்கள். முதல்வர் அது போல சட்டம் ஏதும் இல்லை எனக் கூறி ஷூவுடனேயே கொடியை ஏற்றத் தொடங்கினார்.

 பலர் அவரைத் தடுத்தும் கேட்காமல் கொடியை ஏற்றி வைத்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஏபிவிபியை சேர்ந்த மாணவர்கள் வலுக்கட்டாயமாக கல்லூரி முதல்வரை இழுத்து கல்லூரி வளாகத்துக்கு வெளியே தள்ளினார்கள். இவை அனைத்தும் வீடியோ காட்சிகளாக எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மாணவர்கள் அவரை “ஜெய் ஸ்ரீராம்” மற்றும் “பாரத் மாதா கி ஜே” என கோஷம் எழுப்ப அவரை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அவர் மறுத்ததால் அவரை வெளியே தள்ளும் காட்சியும் வெளியாகி உள்ளது.

தன்னை தாக்கியவரிடம் பேசிய முகமது யாகீன், “தேசியக் கொடியை ஏற்றும் போது காலணியை கழற்ற வேண்டும் என்ற எந்தஒரு விதிமுறையும் கிடையாது. பிரதமர் மோடியோ, ராணுவ அதிகாரிகளோ இதனை செய்வது கிடையாது,” என விளக்கினார். ஆனால் அவருடைய பேச்சை யாரும் கேட்க தயாராகவில்லை. இதுதொடர்பான வீடியோக்கள் தாக்குதல் நடத்தியவர்களால் எடுக்கப்பட்டு உள்ளது. அவரை சுற்றிலும் நின்றுக் கொண்டு கோஷம் எழுப்பி வெளியே இழுத்து வந்து உள்ளனர்.

பாகிஸ்தான் செல்லுங்கள் எனவும் மாணவர்கள் கோஷம் எழுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசிடம் கல்லூரி முதல்வர் முகமது யாகீன் புகார் தெரிவித்து உள்ளார். பகைமையை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டு புகாரை கொடுத்து உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது. ஐதராபாத் தொகுதி எம்.பி. அசாரூதின் ஒவாய்சி பேசுகையில், கல்லூரி முதல்வர் முகமது யாகீனை தாக்கியவர்கள் ஏபிவிபி அமைப்பை சார்ந்தவர்கள், பாரதீய ஜனதாவுடன் தொடர்புடையவர்கள்.

எல்லா பாரதீய ஜனதா முதல்-மந்திரிகளும் தேசியக் கொடியை ஏற்றும் போது ‘ஷூ’வுடன்தான் ஏற்றுகிறார்கள். ஏன் அவர்கள் முதல்-மந்திரிக்கு எதிராக போராடவில்லை? அவர்களை தாக்கவில்லை? முதல்வர் முஸ்லீம் என்பதால் அவரை தாக்கிஉள்ளனர், என கூறிஉள்ளார். மேலும் மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என டுவிட் செய்து உள்ளார்.

 

மூலக்கதை