தமிழக மக்களை காப்பாற்றுவதே தலையாய கடமை: எடப்பாடி பழனிசாமி பேச்சு

PARIS TAMIL  PARIS TAMIL
தமிழக மக்களை காப்பாற்றுவதே தலையாய கடமை: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சுதந்திர தினத்தையொட்டி போலீஸ் துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் ஊர்க்காவல் படைப்பிரிவில் சிறப்பாக மற்றும் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய 854 பேருக்கு ஜனாதிபதி மற்றும் முதல்–அமைச்சர் பெயரிலான விருதுகள் வழங்கும் விழா நேற்று காலை 11 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு 92 பேருக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார். மற்றவர்களுக்கு உயர் அதிகாரிகள் விருதுகளை வழங்கினார்கள். விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது:–

இந்தியாவில் தமிழ்நாடு அமைதி பூங்காவாகவும், சிறந்த பாதுகாப்பான மாநிலமாகவும் விளங்கி மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. தமிழ்நாடு இத்தகைய உன்னத நிலையை அடைவதற்கு, அந்நிலையை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதற்கு, தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் அனைவரது உழைப்பும் காரணமாக இருக்கிறது.

நாட்டில் நிலவும் போராட்டங்கள், தீவிரவாத போக்குகள், தீ விபத்துகள், இயற்கை சீற்றங்கள் ஆகியவற்றால், பொதுமக்களின் உயிர், உடைமைகளுக்கு சேதம் ஏற்படாதவாறு காப்பது காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், சிறைத்துறையினர் என அனைத்து சீருடைப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் தலையாய கடமையாகிறது. அந்த கடமையை தமிழ்நாடு சீருடைப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

காவல்துறை பணி என்பது ஒரு மகத்தான பணி. சமுதாயத்தில், அநீதி இழைக்கப்பட்ட மக்கள் நியாயம் கோரி, காவல் நிலையங்களுக்கு வரும்போது அவர்களை மனிதநேயத்தோடு அணுகி அன்பாக பேசி அவர்களது குறைகளை கேட்டறிந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை பெற்றுத்தரும்போது அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதை பார்த்து அதற்கு காரணமான நீங்களும் மகிழ்ச்சி அடைகிறீர்கள். சட்டத்தின் மீதும், இந்த அரசின் மீதும் மக்களுக்கு அதீத நம்பிக்கை ஏற்படுகிறது.

பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அல்லும்பகலும் அயராது மக்கள் பணியாற்றிக்கொண்டிருக்கும் காவல் துறையினர் தங்கள் கடமையினை மேலும் சிறப்புற ஆற்றும் வகையில் அவர்களுக்கு தேவைப்படும் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று பொதுமக்களையும் இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

விருது பெற்ற 854 சீருடைப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு எனது உளமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். விழாவின் தொடக்கத்தில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வரவேற்று பேசினார். விழா முடிவில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நன்றி தெரிவித்தார்.

விழா மேடையில் முதல்–அமைச்சரோடு சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், அன்பழகன், வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், உள்துறை முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் மட்டும் அமர்ந்திருந்தனர்.

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் விழா மேடைக்கு கீழே முதல் வரிசையில் உட்கார வைக்கப்பட்டனர். மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. நடராஜ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் விழாவுக்கு வந்திருந்தனர்.

டி.டி.வி.தினகரன் மேலூரில் நடத்திய விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த தனியரசு எம்.எல்.ஏ., விழாவில் பங்கேற்றார். விழா நடந்த கலைவாணர் அரங்கம் அலங்கார தோரணங்களுடன் பொலிவுடன் காணப்பட்டது.

மூலக்கதை