நீலத் திமிங்கல சவால் விளையாட்டுக்கு மத்திய அரசு தடை இணையதளத்தில் இருந்து நீக்க உத்தரவு

PARIS TAMIL  PARIS TAMIL
நீலத் திமிங்கல சவால் விளையாட்டுக்கு மத்திய அரசு தடை இணையதளத்தில் இருந்து நீக்க உத்தரவு

இணையதளத்தில் தற்போது உலகம் முழுவதும் சிறுவர்கள் இடையே நீலத் திமிங்கலம் (புளூ வேல்) சவால் என்னும் விளையாட்டு பிரபலமாக உள்ளது. இதை உலகம் முழுவதும் பல லட்சம் சிறுவர்கள் விளையாடுகின்றனர். இதில் சில குறிப்பிட்ட இலக்கு களை 50 நாட்களுக்குள் முடிக்கவேண்டும் என்று நெருக்கடி தரப் படுவதாகவும் இதன் இறுதி இலக்கு சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டும் விதமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த விளையாட்டில் ஈடுபட்ட வெளிநாட்டு சிறுவர்கள் பலர் தற்கொலை செய்துகொண்டு உள்ளனர். இந்தியாவில் மும்பை மற்றும் மேற்கு மிட்னாபூர் (மேற்கு வங்காளம்) நகரங்களை சேர்ந்த சிறுவர்கள் சிலர், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு தடை

இந்த நிலையில், நீலத் திமிங்கல சவால் விளையாட்டில் கலந்துகொள்ளும் சிறுவர்கள் தற்கொலைக்கு தூண்டும் விதமாக கடும் நெருக்கடி அளிக்கப்படுவதாக மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பெற்றோர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் குவிந்தன. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும், இந்த விளையாட்டை தடை செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு அண்மையில் கடிதம் எழுதி இருந்தார்.

இதுபற்றி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்படி சட்ட அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

இதையடுத்து தகவல் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நீலத் திமிங்கல சவால் விளையாட்டுக்கு நேற்று அதிரடியாக தடை விதித்தது.

இது தொடர்பாக இந்த விளையாட்டை தங்களது இணையதள இணைப்பில் வைத்துள்ள முக்கிய இணையதள சேவையாளர்களான கூகுள், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மைக்ரோ சாப்ட், யாகூ ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உடனடியாக நீக்குங்கள்

நீலத் திமிங்கல சவால் விளையாட்டில் பங்கேற்ற இந்திய சிறுவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளது. இந்த விளையாட்டுக்கு அழைக்கப்படும் சிறுவர்கள் துரதிர்ஷ்டவசமாக தங்களுக்கு படுகாயத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் மற்றும் தற்கொலை செய்துகொள்வது போன்ற விபரீத முடிவுக்கு தள்ளப்படுவதும் தெரியவந்துள்ளது.

எனவே உயிருடன் விளையாடும் இதுபோன்ற அபாயகரமான விளையாட்டுகளை உங்களது இணையதள இணைப்பில் இருந்து உடனடியாக நீக்குவதை உறுதி செய்யுங்கள். இதேபோல் வேறு ஏதாவது விபரீத விளையாட்டுகள் உங்களது இணையதள இணைப்பில் இருந்தாலும் அவற்றையும் நீக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை