காயத்தால் பதக்க வாய்ப்பு நழுவியது சோகத்துடன் விடைபெற்றார் போல்ட்

தினகரன்  தினகரன்

லண்டன்: தடகள போட்டிகளின் முடிசூடா மன்னனாக விளங்கிய ஜமைக்கா வீரர் உசேன் போல்ட், தனது கடைசி சர்வதேச போட்டியில் காயம்  காரணமாக பதக்க வாய்ப்பை இழந்து சோகத்துடன் விடைபெற்றார்.லண்டனில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கிய போல்ட்,  பைனலில் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் மட்டுமே பெறமுடிந்தது. தடகளத்தில் ஈடு இணையற்ற வீரராக முத்திரை பதித்த போல்ட், இந்த  தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்ததால், 100 மீட்டர் பந்தயத்தில் அவர் வெண்கலம் வென்றது ரசிகர்களை மிகுந்த  ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.இந்த நிலையில், ஆண்கள் 4X100 மீட்டர் தொடர் ஓட்ட பைனலில் ஜமைக்கா அணிக்காக அவர் கடைசி முறையாக பங்கேற்றார். இதில் ஜமைக்கா  அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை வீரரை மகிழ்ச்சியுடன் வழியனுப்பும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த  இந்த பந்தயத்தில், ஜமைக்கா அணியின் 4வது வீரராக ‘பேட்டனை’ பெற்றுக் கொண்டு பாய்ந்தோடிய போல்ட், திடீரென காலில் தசைப்பிடிப்பு  ஏற்பட்டதால் ஓட முடியாமல் வலியால் துடித்தபடி களத்திலேயே சுருண்டு விழுந்தார்.இதனால் ஜமைக்கா அணியின் பதக்க வாய்ப்பு கை நழுவியது. 100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் ரிலே ரேசில் ஒலிம்பிக் மற்றும் உலக  சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கங்களைக் குவித்து சரித்திர சாதனை படைத்த உசேன் போல்ட், தனது கடைசி போட்டியில் வெறுங்கையுடன்  வெளியேறியது அவரை மட்டுமல்ல, ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தங்கப் பதக்கத்தையும், அமெரிக்கா  வெள்ளி, ஜப்பான் வெண்கலம் வென்றன. 4X100 மீட்டர் ரிலே போட்டி 40 நிமிட நேரம் தாமதமாகத் தொடங்கியதே போல்ட் காயம் அடைந்ததற்கு முக்கிய காரணம் என்று சக ஜமைக்கா வீரர்  யோகன் பிளேக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை