மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகளம் : தமிழக வீரர்கள் தங்கம் வென்று சாதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகளம் : தமிழக வீரர்கள் தங்கம் வென்று சாதனை

மதுரை : உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகள போட்டிகளில், தமிழகத்தை சேர்ந்த 3 வீரர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். கனடாவில் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான 7வது சர்வதேச தடகள போட்டி, ஆக.

3ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதில் மதுரையை சேர்ந்த வீரர்கள் மனோஜ், கணேசன் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் தமிழகம் சார்பில் முதல்முறையாக கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் மூவரும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். தமிழக வீரர்களால் மட்டும் இதுவரை இந்தியாவிற்கு 5 தங்கம், 2 வெள்ளிப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து பயிற்சியாளர் ரஞ்சித் கூறுகையில், ‘உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச போட்டியில் முதல்முறையாக கலந்து கொண்ட வீரர்கள், தங்கம் வென்று சாதனை படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். செல்வராஜ் ஈட்டி எறிதலில் தங்கம், மனோஜ் ஈட்டி எறிதலில் தங்கம், வட்டு மற்றும் குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

கணேசன் குண்டு, ஈட்டி மற்றும் வட்டு எறிதல் ஆகிய மூன்று போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம் மொத்தம் 5 தங்கம் மற்றும் 2 வெள்ளி கிடைத்துள்ளது.

ஆகஸ்ட் 18ம் தேதி தமிழக வீரர்கள் நாடு திரும்புகின்றனர்’ என்றார்.

.

மூலக்கதை