உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் பைனலில் தேவிந்தர்

தினகரன்  தினகரன்

லண்டன் : உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஈட்டி எறிதல் பைனலில் பங்கேற்க இந்திய வீரர் தேவிந்தர் சிங் காங் தகுதி பெற்றார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தேவிந்தர் சிங் (26 வயது), தகுதித் சுற்றில் தனது கடைசி வாய்ப்பில் 83 மீட்டர் எறிய வேண்டிய நெருக்கடியுடன் களமிறங்கிய நிலையில், அபாரமாக 84.22 மீட்டர் தூரத்துக்கு எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் பைனலுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பைனலுக்கு தகுதி பெற்றுள்ள 13 வீரர்களில், தகுதிச்சுற்று செயல்பாட்டின் அடிப்படையில் தேவிந்தர் 7வது இடத்தில் இருப்பதால் பதக்கம் வெல்ல இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது கட்டாயம். இதே போட்டியில் களமிறங்கிய சக இந்திய வீரர் நீரஜ் சோப்ரா (19 வயது), பைனலுக்கு முன்னேறத் தவறினார். உலக ஜூனியர் போட்டியில் சாதனை படைத்தவரான நீரஜ் தனது 3 எறிதலில் ஒரு தவறான முயற்சி உட்பட அதிகபட்சமாக 82.26 மீட்டர் மட்டுமே எறிந்து வெளியேறினார். இவரது தனிப்பட்ட சாதனை அளவு 86.48 மீட்டர் என்பதுடன், நடப்பு சீசனில் 85.63 மீட்டர் தூரம் வரை எறிந்திருந்ததால், இந்தியாவின் பதக்க நம்பிக்கையாக நீரஜ் விளங்கினார். அவரது வெளியேற்றம் இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

மூலக்கதை