கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம் ‘ஒயிட்வாஷ்’ சாதனைக்கு இந்தியா முனைப்பு

தினகரன்  தினகரன்

பல்லெகெலே : இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, பல்லெகெலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலே மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் 304 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, அடுத்து கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. விராத் கோஹ்லி தலைமையில் இந்தியா தொடர்ச்சியாக பெற்ற 8வது டெஸ்ட் தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பல்லெகெலேவில் இன்று தொடங்கும் கடைசி டெஸ்டில் ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் முதல் முறையாக ‘ஒயிட்வாஷ்’ வெற்றியை பதிவு செய்து கேப்டன் கோஹ்லி சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவான், ராகுல், புஜாரா, கோஹ்லி, ரகானே என்று முன்னணி பேட்ஸ்மேன்கள் மட்டுமல்லாது, பின் வரிசையிலும் சாஹா, ஹர்திக், அஷ்வின் ஆகியோர் கணிசமாக ரன் குவிப்பது இந்திய அணிக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. இரண்டு டெஸ்டின் முதல் இன்னிங்சிலும் இந்தியா 600+ ஸ்கோர் அடித்தது, பேட்டிங் வரிசையின் வலிமையை பறைசாற்றுகிறது. குறிப்பாக, புஜாரா 3 இன்னிங்சில் 2 சதம் உட்பட 301 ரன் குவித்து (அதிகம் 153, சராசரி 100.33) சிறப்பான பார்மில் உள்ளார். பல்லெகெலே போட்டிக்கு ஜடேஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தாலும் உமேஷ், ஷமி, ஹர்திக், அஷ்வின், குல்தீப் அல்லது அக்சர் பட்டேல் அடங்கிய பந்துவீச்சு வியூகம் இலங்கை பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியா உற்சாகமாக களமிறங்கும் நிலையில், தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருவதால் ரசிகர்கள் மற்றுமின்றி கிரிக்கெட் வாரியமும் கடும் அதிருப்தியில் உள்ளதால் இலங்கை அணி கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. காயம் காரணமாக ஹெராத், நுவன் பிரதீப், குணரத்னே ஆகியோர் விளையாட முடியாததும் அந்த அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் லாகிரு குமாரா, விஷ்வா பெர்னாண்டோ இருவரும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒயிட்வாஷ் செய்ய இந்தியாவும், ஆறுதல் வெற்றிக்காக இலங்கையும் வரிந்துகட்டுவதால், இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், அபினவ் முகுந்த், செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே, ரோகித் ஷர்மா, ஆர்.அஷ்வின், அக்சர் பட்டேல், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ். இலங்கை: தினேஷ் சண்டிமால் (கேப்டன்), துஷ்மந்த சமீரா, தனஞ்ஜெயா டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), விஷ்வா பெர்னாண்டோ, லாகிரு கமகே, உபுல் தரங்கா, திமத் கருணரத்னே, லாகிரு குமாரா, குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தில்ருவன் பெரேரா, மலிண்டா புஷ்பகுமாரா, லாகிரு திரிமன்னே, லக்‌ஷன் சந்தகன்.

மூலக்கதை