உலக தடகள சாம்பியன்ஷிப் 5000 மீ. ஓட்டத்தில் தமிழக வீரர் ஏமாற்றம்

தினகரன்  தினகரன்

லண்டன் : உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 5000 மீ. ஓட்டத்தில் தமிழக வீரர் கோவிந்தன் லட்சுமணன் சிறப்பாக செயல்பட்ட போதிலும், இறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறினார். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடக்கிறது. ஆண்களுக்கான 5000 மீ. ஓட்டப் போட்டி நேற்று நடந்தது. இதில், தமிழக வீரர் கோவிந்தன் லட்சுமணன் பங்கேற்றார். சமீபத்தில் ஆசிய தடகளத்தில் 5000, 10000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றதால் உலக தடகளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டார். நேற்று நடந்த முதல் தகுதிச் சுற்றில் சிறப்பாக ஓடிய அவர் 13 நிமிடம் 35.69 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்தார். இதுவே லட்சுமணனின் சிறப்பான ஓட்டமாகும். தனது முந்தைய சிறப்பான ஓட்டத்தை (13 நிமிடம் 36.62 வினாடி) காட்டிலும் 1 வினாடி வேகமாக ஓடினார். ஆனாலும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் ஏமாற்றமடைந்தார். இது குறித்து லட்சுமணன் அளித்த பேட்டியில், ‘‘இது என்னுடைய முதல் உலக சாம்பியன்ஷிப் தொடராகும். இதில் தேசிய சாதனையை முறியடிக்க வேண்டுமென முயற்சித்தேன். அது முடியவில்லை. ஆனாலும் எனது சிறப்பான ஓட்டத்தை இங்கு பதிவு செய்ய முடிந்தது. இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியாததால் வருத்தப்படவில்லை. ஏனெனில் எனது சிறப்பான பங்களிப்பை பதிவு செய்துள்ளேன். இன்னும் கடினமாக உழைத்து, தேசிய சாதனை படைக்க வேண்டுமென்பதே எனது இலக்கு’’ என்றார்.

மூலக்கதை