இலங்கைக்கு எதிரான ஒரு நாள், டி20 தொடர்களில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு? ரோகித் சர்மா கேப்டனாக வாய்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கைக்கு எதிரான ஒரு நாள், டி20 தொடர்களில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு? ரோகித் சர்மா கேப்டனாக வாய்ப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட்டுகளின் முடிவில், 2-0 என இந்தியா தொடரை கைப்பற்றி விட்டது.

3வது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 12ம் தேதி பல்லேகெலேவில் தொடங்குகிறது. இதன்பின் வரும் 20ம் தேதி முதல் செப்டம்பர் 6ம் தேதி வரை, இந்தியா-இலங்கை அணிகள் இடையே, 5 ஒரு நாள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டி கொண்ட தொடர்கள் நடைபெறுகிறது.

ஒரு நாள், டி20 தொடர்களுக்கான இந்திய அணியை தேர்வு செய்ய, இன்னும் 2 நாட்களில் தேர்வாளர்கள் சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.   கடந்த 12 மாத கால அளவில், டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்து வகைகளிலும் சேர்த்து, இந்திய அணி மொத்தம் 43 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 42 போட்டிகளில் விராட் கோஹ்லி விளையாடியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தர்மசாலா டெஸ்ட்டில் மட்டும், தோள்பட்டை காயம் காரணமாக விராட் கோஹ்லி விளையாடவில்லை.

இந்த கால இடைவெளியில் இலங்கையின் குஷால் மெண்டிஸ் மட்டுமே அதிகபட்சமாக 46 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதில், 13 டெஸ்ட் அடக்கம். ஆனால் விராட் கோஹ்லி 18 டெஸ்ட்டுகளில் பங்கேற்றுள்ளார்.

கூடுதலாக ஐபிஎல் 10வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் விராட் கோஹ்லி 10 போட்டிகளில் களமிறங்கியுள்ளார். இது தவிர வரும் ஜனவரி மாதம் தென் ஆப்ரிக்கா செல்வதற்கு முன்பாக, செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை இந்தியா பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ளது.



 ஏற்கனவே தொடர்ச்சியாக பல்வேறு போட்டிகளில் விளையாடி வரும் விராட் கோஹ்லிக்கு இந்த தொடர்களில் ஓய்வளிப்பது கடினம்.

எனவே இலங்கைக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

.

மூலக்கதை