ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம் உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ அப்பீல்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம் உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ அப்பீல்?

மும்பை: 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சண்டிலா உள்பட 36 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கிரிக்கெட் உலகில் பெரும் புயலை கிளப்பிய இந்த விவகாரத்தால், ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஆயுட்கால தடை விதித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உத்தரவிட்டது.

இது குறித்து விசாரணை நடத்திய டெல்லி அமர்வு நீதிமன்றம், ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய முகாந்திரம் இல்லை எனக்கூறி, குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீசாந்த் உள்பட 36 பேரையும் வழக்கில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு விடுவித்தது.

நீதிமன்றம் விடுவித்து விட்டதால், தனக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடையை நீக்க வேண்டும் என ஸ்ரீசாந்த் விடுத்த வேண்டுகோளை பிசிசிஐ நிராகரித்து விட்டது.

இதனால் ஆயுட்கால தடைக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில், ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிசிசிஐ-யால் ஸ்ரீசாந்த் மீது விதிக்கப்பட்ட ஆயுட்கால தடையை நீக்கி உத்தரவிட்டது.

இந்திய அணிக்காக உலக கோப்பையில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளார். ஆனால் கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய பிசிசிஐ முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சட்ட ரீதியிலான ஆலோசனை மற்றும் அறிவுரைகளை, ஊழல் எதிர்ப்பு பிரிவு தலைவர் நீரஜ்குமாரிடம் இருந்து பெற பிசிசிஐ முயன்று வருகிறது.

கிரீன் சிக்னலுக்காக காத்திருக்கிறேன்: 2019 உலக கோப்பையில் விளையாடுவதே கனவு

திருவனந்தபுரம்: ஆயுட்கால தடை நீக்கப்பட்டது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் அளித்த பேட்டி: இந்திய அணிக்காக விளையாட முதல் முறையாக அழைக்கப்பட்டபோது உணர்ந்ததை விட தற்போது மிகவும் சிறப்பாக உணர்கிறேன். இது எனக்கான புதிய வாழ்க்கை.

ஒரு சிறிய சம்பவம் இந்த உலகின் முன்பாக தவறான வழியில் சித்தரித்து காட்டப்பட்டுள்ளது. நீதிமன்றங்களால் குற்றவாளி என கண்டறியப்பட்டவர்கள் கூட (பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமீர்), டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற உலகளவிலான போட்டிகளில் விளையாடுகின்றனர்.

அவர்கள் சார்ந்த கிரிக்கெட் சங்கம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆகியவையின் ஆதரவே இதற்கு காரணம். எனது கேரியரிலும் இது நடக்கும் என நம்புகிறேன்.

கடவுள் மிகவும் இரக்கமுள்ளவர்.

இதனால்தான் கடினமாக உழைத்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்கான மற்றொரு வாய்ப்பை பெற்றுள்ளேன்.

எனக்கு இது மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆனால் இதற்கு பிசிசிஐ, கேரள கிரிக்கெட் சங்கம் (கேசிஏ) ஆகியவற்றின் ஆதரவு மிகவும் முக்கியமானது.

பிசிசிஐ, கேசிஏ-விடம் இருந்து கிரீன் சிக்னலுக்காக காத்திருக்கிறேன். அதன்பின் மீண்டும் பயிற்சியை தொடங்குவேன்.

என்னிடம் இருந்து கிரிக்கெட் எடுக்கப்பட்டு விட்டதால், இந்த 4 ஆண்டுகளில் அரசியல் மற்றும் சினிமாவில் கவனம் செலுத்தினேன். என்னால் மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியும்.

2019 உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவு. அந்த உலக கோப்பையில் நான் விளையாடினால், அது அதிசயமாகதான் இருக்கும் என்பதும் எனக்கும் தெரியும்.

எனினும் அது போன்ற அதிசயங்கள் நடக்கும் என்பதை எப்போதும் நம்புபவன் நான்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை