ரஷ்யா- அமெரிக்கா மோதல் வலுக்கிறது 755 தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற வேண்டும்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரஷ்யா அமெரிக்கா மோதல் வலுக்கிறது 755 தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற வேண்டும்

மாஸ்கோ : ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் வலுப்பெற்று வருகிறது. இதையடுத்து தங்களது நாட்டில் உள்ள 755 தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என புடின் கட்டளை பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு ஜனவரியில் பதவி ஏற்றார். அதன் பின்னர் அவர் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக வெளியுறவுக் கொள்கை, குடியேற்றத்துறை ஆகியவற்றில் அவர் செய்து வரும் மாற்றம் உலக அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதன் ஒரு கட்டமாக அமெரிக்க நலனுக்கு எதிராக ரஷ்யா செயல்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

மேலும் அமெரிக்காவின் நட்பு நாடுகளை பலவீனப்படுத்த ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகியவை முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாகவும், உக்ரைனில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டிய டிரம்ப், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளார்.   இதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனால் எரிச்சல் அடைந்த ரஷ்யா, அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது. தங்களது நாட்டில் உள்ள 755 அமெரிக்க தூதரக அதிகாரிகள் உடனடியாக ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என அதிபர் புடின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யாவில் உள்ள தூதரங்களில் 1000க்கும் அதிகமான அமெரிக்க அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இதுகுறித்து புடின் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நிலைமை சீராகும் என காத்திருந்தோம்.

ஆனால் அமெரிக்காவின் அணுகுமுறையில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. எனவே 755 அதிகாரிகளும் உடனடியாக ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்காவில் இருந்து 35 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றி 2 தூதரங்களை இழுத்து மூடினார் என்பது குறிப்பிடத்தக்கது.   தற்போது இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை