எம்பி பதவியில் இருந்து சரத் யாதவை தகுதி நீக்கம் செய்தது சட்டவிரோதம்: அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு...

தமிழ் முரசு  தமிழ் முரசு
எம்பி பதவியில் இருந்து சரத் யாதவை தகுதி நீக்கம் செய்தது சட்டவிரோதம்: அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு...

புதுடெல்லி:  எம்பி பதவியில் இருந்து ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவை தகுதிநீக்கம் செய்தது சட்டவிரோதம் என்றும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாளம்-பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இதற்கு முன்பு லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன், நிதீஷ்குமார் கூட்டணி வைத்திருந்தார்.
இக்கூட்டணி பிரிந்த நிலையில், பாஜவுடன் நிதீஷ்குமார் சேர்ந்தார். இதனால் ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சரத் யாதவ் அதிருப்தி அடைந்தார்.இருவருக்கும் கருத்துவேறுபாடு அதிகரித்த நிலையில், எதிர்க்கட்சிகள் நடத்திய பொதுக்கூட்டத்தில் சரத் யாதவ் பங்கேற்றார். தாங்களே உண்மையான ஐக்கிய ஜனதாதளம் என சரத் யாதவ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம் நிதீஷ்குமார் வசமானது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக சரத் யாதவ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், சரத் யாதவின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘சரத் யாதவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது சட்டவிரோதமானது; ஜனநாயகத்துக்கு எதிரானது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.

இச்செயல் கண்டனத்துக்கு உரியது.

தகுதிநீக்க நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்’’ என்றார்.
மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சரத் யாதவின் பதவிக்காலம் வருகிற 2022ம் ஆண்டு வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.  

.

மூலக்கதை