89 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல்: குஜராத்தில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
89 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல்: குஜராத்தில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

காந்திநகர்: குஜராத்தில் நாளை மறுநாள் முதல்கட்டமாக, 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளதால் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரத்தில் தலைவர்கள் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நாளை மறுநாள்(9ம் தேதி), 14ம் தேதிகளில் இரண்டு கட்டமாக  நடக்கிறது. இங்கு கடந்த 22 ஆண்டுகளாக பாஜ தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் பாஜவும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என முனைப்புடன் காங்கிரஸும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

இந்த தேர்தலில் பாஜ, காங்கிரஸ் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.   இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜ தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க உள்ள ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை மறுதினம் முதல்கட்ட தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொண்டர்கள் மும்முரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில், ராஜ்காட், போர்பந்தர், நர்மதா, சூரத், ஜாம்நகர், கட்ச் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது.

வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது.

ராணுவத்தினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

.

மூலக்கதை