’என் தவறை சுட்டிக்காட்டுங்கள்!’ - பா.ஜ.கவுக்கு ராகுல் கோரிக்கை

விகடன்  விகடன்
’என் தவறை சுட்டிக்காட்டுங்கள்!’  பா.ஜ.கவுக்கு ராகுல் கோரிக்கை

"பா.ஜ.க., தொடர்ந்து என் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது, என்னை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது” என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.

ஆளும் பா.ஜ.க, ‘வளர்ச்சிக்கான மாடல்’ என இந்தியாவுக்கே முன்னுதாரணமாகப் பரிந்துரைக்கும் மாநிலம் குஜராத். கடந்த 22 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெற்றியை மட்டுமே சந்தித்து, ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வும், 27 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸும் நேரடியாக மோதுகின்றன. குஜராத் மாநிலத்தில், சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்காக, அந்த மாநில ஆளும் கட்சியான பா.ஜ.க-வும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மோடிக்கு எதிராக தினமும் தன் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பிவந்தார். தேர்தல் நெருங்குவதை அடுத்து, ராகுலின் கேள்விகள் தொடர்ந்துவந்தன. இந்த வகையில், நேற்று முன்தினம் குஜராத் விலைவாசி உயர்வுகுறித்து ராகுல் எழுப்பிய கேள்வியில், சில தகவல்களின் புள்ளிவிவரங்கள் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாக பா.ஜ.க குற்றம் சுமத்தியது. 

 அதற்குப் பதிலளித்த ராகுல், “நான் நரேந்திர மோடிபோல இல்லை. மிகவும் சாதாரணமானவன். நானும் தவறுகள் செய்வேன். சில நேரங்களில், தவறுகள்தான் நம் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகின்றன. இதுபோல சுட்டிக்காண்பித்ததற்கு நன்றி. தொடர்ந்து இதுபோன்ற பணியைச் செய்யுங்கள். என்னை மேம்படுத்திக்கொள்ள உதவும்” எனக் குறிப்பிட்டு பதிலளித்துள்ளார்.

மூலக்கதை