ராமர் கோயிலை அரசியலாக்குவதா? காங்கிரசுக்கு மோடி கண்டனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராமர் கோயிலை அரசியலாக்குவதா? காங்கிரசுக்கு மோடி கண்டனம்

அகமதாபாத்: ராமர் கோயில் பிரச்சினையை அடுத்த மக்களவை தேர்தலுடன் காங்கிரஸ் தொடர்புபடுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2. 77 ஏக்கர் நிலத்தை, சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லீலா ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டில் அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து 13 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘’இந்த வழக்கில் அரசியல் சிக்கல்கள் உள்ளன.

ஒரு கட்சியின் வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவே விசாரணையில் அவசரம் காட்டக்கூடாது.

வழக்கின் இறுதி விசாரணையை அடுத்த மக்களவை தேர்தலுக்குப் பிறகு ஒத்தி வைக்க வேண்டும்’’ என்று கபில் சிபல் வாதாடினார்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் தன்துகாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு இதுபற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் எம். பி கபில் சிபல் நேற்று பாபர் மசூதி தரப்புக்காக ஆஜரானார்.

அது அவரது உரிமை. ஆனால், அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணையை, 2019-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஒத்திவைக்க வேண்டும் என கோரியுள்ளார்.

ராமர் கோயில் விவகாரத்தை தேர்தலுடன் தொடர்புபடுத்துவது ஏன்? காங்கிரஸ் ராமர் கோயில் விவகாரத்தை தேர்தலுடன் தொடர்புபடுத்துவதன் மூலம் அக்கட்சிக்கு நாட்டைப் பற்றிய கவலை இல்லை என்பது தெளிவாகிறது’’ எனக் கூறினார்.

.

மூலக்கதை