8 ஆயிரம் கோடி மோசடி வழக்கு: லாலு மருமகனிடம் அமலாக்கத்துறை விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
8 ஆயிரம் கோடி மோசடி வழக்கு: லாலு மருமகனிடம் அமலாக்கத்துறை விசாரணை

புதுடெல்லி: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மருமகன், சைலேஷ் குமாரிடம், 8,000 கோடி ரூபாய், பணப் பரிமாற்ற மோசடி வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவின் மகள், மிசாபாரதி.

இவர் மாநிலங்களவை எம்பியாக இருக்கிறார். இவரது கணவர் சைலேஷ் குமார்.

இவர்கள் இருவரும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக ஏராளமான அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம், பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 8,000 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் மோசடி செய்திருப்பது உறுதியானது.
இது தொடர்பாக இருவரிடமும், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மிசா பாரதிக்கு சொந்தமான வீடு, பண்ணை வீடுகள், நிறுவனங்களில், சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி சைலேஷ் குமாருக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதையடுத்து, அவர் நேற்று ஆஜரானார்.

சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், விசாரணையின் போது, மிசா பாரதி தெரிவித்த தகவல்கள் தொடர்பாக, சைலேஷிடம், அதிகாரிகள் விசாரித்தனர்.

மிசா பாரதியிடமும், மீண்டும் விசாரணை நடத்த, அமலாக்கத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

.

மூலக்கதை