இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் சேர்ப்பு: நான் பந்து வீசுகையில் டோனி கீப்பிங் செய்ய வேண்டும்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் சேர்ப்பு: நான் பந்து வீசுகையில் டோனி கீப்பிங் செய்ய வேண்டும்

திருவனந்தபுரம்: இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதன்பின் இரு அணிகளும் 3 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் மோதுகின்றன.

இதில், டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், அரியானாவை சேர்ந்த ஆல் ரவுண்டர் தீபக் ஹூடா, கேரளாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பாசில் தம்பி ஆகிய அறிமுக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.



 இவர்களில் ஒருவரான பாசில் தம்பி அளித்த பேட்டி: மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. கடந்த ஓராண்டில், அதிக நம்பிக்கை உடைய பந்து வீச்சாளராக மாறியுள்ளேன்.

இலங்கைக்கு எதிராக சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பந்து வீசுகையில் வேகத்தை இழந்து விடக்கூடாது என கிளென் மெக்ராத் (ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்) எனக்கு அறிவுரை வழங்கினார்.

அதை எனது மனதில் வைத்திருக்கிறேன்.

அதுமட்டுமின்றி அவருடனான கலந்துரையாடல் மூலம் நிறைய விஷயங்களை கற்று கொண்டுள்ளேன்.

எனது வாழ்க்கையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடர்தான் திருப்புமுனை (குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார்). நான் பந்து வீசுகையில், டோனி விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும் என்பது எனது முக்கியமான ஆசைகளில் ஒன்று.

இது எனது நீண்ட நாள் கனவு. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் முறையே டிசம்பர் 10, 13, 17ம் தேதிகளில் நடைபெறுகின்றன. அதன்பின் 3 டி20 போட்டிகள் முறையே டிசம்பர் 20, 22, 24ம் தேதிகளில் நடக்கின்றன.



ரோல் மாடல் யுவி: தீபக் ஹுடா அளித்த பேட்டி: யுவராஜ் சிங்கிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்று கொண்டுள்ளேன். அதை களத்தில் வெளிப்படுத்துவேன்.

எப்படி விளையாட வேண்டும்? வெவ்வேறான சூழ்நிலைகளில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும்? என அவர் கூறியுள்ளார். எனது பலம், பலவீனங்கள் குறித்தும் அவர் கூறியுள்ளார்.

ஒரு பந்து வீச்சாளரை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? அணியை எப்படி முன்னெடுத்து செல்ல வேண்டும்? என பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். யுவராஜ் சிங் எனக்கு ரோல் மாடல் போன்றவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை