இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு: டோனியுடன் இணைந்து நாட்டிற்காக விளையாடுவது சிறப்பு வாய்ந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு: டோனியுடன் இணைந்து நாட்டிற்காக விளையாடுவது சிறப்பு வாய்ந்தது

சென்னை: இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரின் 2 போட்டிகள் முடிவடைந்து விட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதன்பின் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது.

ஒரு நாள் தொடரை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில், தமிழக ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் டோனியுடன் இணைந்து, ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய வாஷிங்டன் சுந்தர், முதல் முறையாக இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து வாஷிங்டன் சுந்தர் கூறுகையில், ‘’எந்த ஒரு கிரிக்கெட் வீரர் என்றாலும், டோனியுடன் இணைந்து விளையாடுவதை விரும்புவர். நான் அவருடன் இணைந்து, ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் விளையாடியுள்ளேன்.

ஆனால் நாட்டிற்காக அவருடன் இணைந்து விளையாடுவது என்பது வித்தியாசமானது. சிறப்பு வாய்ந்ததும் கூட.

எந்த ஒரு பந்து வீச்சாளரின் பணியையும் டோனி எளிதாக்கி விடுவார். எனது பணியையும் கூட அவர் எளிதாக்கியுள்ளார்.



எனவே டோனி இருக்கையில், இந்திய அணிக்கு என்னால் தேர்வாக முடிந்தது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார். ஐபிஎல் தொடரின் பவர் பிளே ஓவர்களில், ரோகித் சர்மா மற்றும் பிரண்டன் மெக்கல்லம் போன்ற உலகின் தலைசிறந்த அதிரடி வீரர்களுக்கு பந்து வீசுகையில், வாஷிங்டன் சுந்தர் பிரமாதப்படுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், ‘’ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினேன். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி ஒன்றில் கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்காக விளையாடினேன் (கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் பங்கேற்றது.



அதற்கு முன்னதாக நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி போட்டி). அதிலும் சிறப்பாகவே செயல்பட்டேன் (8 ஓவர்கள் பந்து வீசி 23 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்).

கடந்த ஆண்டு விஜய் ஹசாரே மற்றும் தியோதர் டிராபி தொடர்களிலும் கூட நன்றாகவே விளையாடினேன். இவை அனைத்தின் காரணமாகதான் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளதாக நினைக்கிறேன்.

டி20 போட்டிகளுக்கு நான் தேர்வு செய்யப்படலாம் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்து கொண்டுதான் இருந்தது’’ என்றார். வாஷிங்டன் சுந்தருக்கு 18 வயது மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் கூறுகையில், ‘’இந்திய அணிக்கு தேர்வான செய்தி எனது பயிற்சியாளரிடம் இருந்து கிடைத்ததும், எனது பெற்றோர் மற்றும் ஒரு சில நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே கூறினேன்.

 எனது பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். 18 வயதில் தங்கள் மகன் நாட்டிற்காக விளையாடுவது எந்த ஒரு பெற்றோருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்க கூடியது.

இது அவர்களுக்கு மகிழ்ச்சியான தருணம்’’ என்றார். இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான ஒரு நாள் தொடரின் முதல் போட்டி, டிசம்பர் 10ம் தேதி தர்மசாலாவிலும், டி20 தொடரின் முதல் போட்டி டிசம்பர் 20ம் தேதி கட்டாக்கிலும் நடைபெறுகிறது.

இந்த சிறப்பு வாய்ந்த சந்தர்ப்பத்தில், மறைந்த ராணுவ அதிகாரி பி. டி. வாஷிங்டனை, வாஷிங்டன் சுந்தர் நினைவு கூர்ந்தார்.

பி. டி. வாஷிங்டன், வாஷிங்டன் சுந்தரின் தந்தையினுடைய வழிகாட்டி. வாஷிங்டன் சுந்தரின் குடும்பத்திற்கு 2 தெரு தள்ளி வசித்தவர்.

ஆனால் வாஷிங்டன் சுந்தர் பிறப்பதற்கு முன்பாகவே உயிரிழந்து விட்டார். ‘’எனக்குள் பி. டி. வாஷிங்டன் வாழ்வதாக எனது தந்ைத நம்புகிறார்.

அவரது பெயர் எனக்கு இருப்பது மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது’’ என வாஷிங்டன் சுந்தர் கூறினார்.

.

மூலக்கதை