6வது இரட்டை சதம் மூலம் சாதனை: பெரிய சதங்கள் விளாசுவதை புஜாராவிடம் கற்று கொண்டேன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
6வது இரட்டை சதம் மூலம் சாதனை: பெரிய சதங்கள் விளாசுவதை புஜாராவிடம் கற்று கொண்டேன்

டெல்லி: இந்தியா-இலங்கை இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, டெல்லி பெரோ ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

கேப்டன் கோஹ்லி 243, முரளி விஜய் 155, ரோகித் சர்மா 65 ரன்கள் விளாசினர். சண்டகன் 4, காமகே 2, தில்ரூவன் பெரேரா 1 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை 2ம் நாள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. ஏஞ்சலோ ேமத்யூஸ் 57, கேப்டன் சண்டிமல் 25 ரன்களுடன் இன்று 3ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

முன்னதாக 6 இரட்டை சதங்களை விளாசிய முதல் கேப்டன் என்பது உள்பட பல்வேறு சாதனைகளை கோஹ்லி படைத்துள்ளார். இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



இதனிடையே பிசிசிஐ. டிவி வெளியிட்ட வீடியோ ஒன்றில் கோஹ்லியும், புஜாராவும் கலந்துரையாடியுள்ளனர். இதில், கோஹ்லி பேசுகையில், ‘’ஆச்சரியமாக இருக்கிறது.

பெரிய சதங்களை எப்படி விளாச வேண்டும்? என்பதை உங்களிடம் இருந்துதான் (புஜாராவிடம் இருந்து) கற்று கொண்டேன். புஜாராவின் நீண்ட இன்னிங்ஸ், அவரது கவனமான ஆட்டம், தொடர்ந்து பேட்டிங் செய்வதில் உள்ள மன உறுதி ஆகியவற்றை புஜாராவிடம் இருந்து நாங்கள் கற்று கொள்கிறோம்.

இவைகளால் ஈர்க்கப்பட்ட நானும், முடிந்த வரை நீண்ட நேரம் அணிக்காக பேட்டிங் செய்கிறேன். தற்போது அணிக்காக இன்னும் அதிகம் விளையாடுவதை பற்றிதான் யோசித்து கொண்டிருக்கிறேன்.



ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் சதம்தான், நான் விளாசியதில் எனக்கு விருப்பமான சதம் (2014 டிசம்பர் மாதம், 141 ரன்கள்). இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் 235 ரன்கள் விளாசியது விருப்பமான இரட்டை சதம் (2016 டிசம்பர் மாதம்)’’ என்றார்.

டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து வருவதாக கூறப்படும் சூழலில் இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என கோஹ்லி வலியுறுத்தி இருந்தார். அதற்கு ஏற்ப அவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாகவே விளையாடி வருகிறார்.

ஒரு நாள் போட்டிகளில்  இரட்டை சதம் எப்போது?: டெஸ்ட் மட்டுமல்ல, ஒரு நாள், டி20 போட்டிகளிலும் கோஹ்லி மிக சிறப்பாக விளையாடி வருகிறார்.

மூன்று வகையான கிரிக்கெட்டிலும் கோஹ்லியின் சராசரி 50க்கும் மேல் இருப்பது, அவர் ஒரு பேட்டிங் மேதை என்பதை நிரூபிக்கிறது. ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசுவது குறித்து கோஹ்லி கூறுகையில், ‘’இதற்கு தொடக்க வீரர்களுக்குதான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக நினைக்கிறேன்.

ஒரு வேளை நான் முன்கூட்டியே களமிறங்கினால், ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசுவது நடக்கலாம். 2 முறை இதற்கு அருகில் நான் வந்தேன்.



ஆனால் முதல் 5 ஓவர்களில் இருந்து பேட்டிங் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ரோகித் சர்மா இந்த சாதனையை 2 முறை படைத்துள்ளார் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில், 2013ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி 209 ரன்கள் மற்றும் இலங்கைக்கு எதிராக கொல்கத்தாவில் 2014ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி 264 ரன்கள்).

நானும் அதை செய்ய முயற்சிக்கிறேன்’’ என்றார்.

ஒரு நாள் போட்டிகளில் கோஹ்லியின் அதிகபட்ச ஸ்கோர் 183 என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை