வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் நியூசிலாந்து அபார வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் நியூசிலாந்து அபார வெற்றி

வெலிங்டன்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதன் முதல் போட்டி கடந்த 1ம் தேதி வெலிங்டனில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக கீரண் பாவெல் 42 ரன்கள் எடுத்தார். நீல் வாக்னர் 7, டிரென்ட் போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதன்பின் முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து, 9 விக்கெட் இழப்பிற்கு 520 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பிளண்டெல் 107, கிராண்ட்ஹோமி 105, ரோஸ் டெய்லர் 93 ரன்கள் விளாசினர்.

 கீமர் ரோச் 3, மிகுல் கம்மின்ஸ், ரோஸ்டன் சேஸ் தலா 2, கேப்ரியல், கேப்டன் ஜேசன் ஹோல்டர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

386 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 3ம் நாள் முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. கிரெய்க் பிராத்வெயிட் 79, ஷாய் ஹோப் 21 ரன்களுடன் இன்று 4ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கிரெய்க் பிராத்வெயிட் ஆட்டமிழந்தார். அவர் 91 ரன்கள் எடுத்தார்.

பின்னர் ஷாய் ஹோப் 37 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்ஸில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

 இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

ஹென்ரி 3, டிரென்ட் போல்ட், கிராண்ட்ஹோமி, நீல் வாக்னர் தலா 2, சாண்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். 2 இன்னிங்ஸிலும் சேர்த்து 9 விக்கெட் வீழ்த்திய நீல் வாக்னர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இரு அணிகள் இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 9ம் தேதி ஹாமில்டனில் தொடங்குகிறது.


.

மூலக்கதை