முகமூடி அணிந்து பீல்டிங் செய்த விவகாரம்: இலங்கை வீரர்களின் நடத்தையால் இந்திய மாஜி கேப்டன் கங்குலி கவலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
முகமூடி அணிந்து பீல்டிங் செய்த விவகாரம்: இலங்கை வீரர்களின் நடத்தையால் இந்திய மாஜி கேப்டன் கங்குலி கவலை

கொல்கத்தா: டெல்லியில் நடைபெற்று வரும், இந்தியா-இலங்கை இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான நேற்று, காற்று மாசு காரணமாக இலங்கை வீரர்கள் முகமூடி அணிந்து பீல்டிங் செய்தனர். இதனால் அவ்வப்போது ஆட்டம் தடைபட்ட நிலையில், பெரிய ஸ்கோர் விளாச எண்ணியிருந்த இந்திய கேப்டன் கோஹ்லி, உடனடியாக டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

அதன்பின் இந்திய வீரர்கள் முகமூடி அணியாமல் பீல்டிங் செய்தனர். மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களும் கூட முகமூடி அணியவில்லை.

இதனால் போட்டியை நிறுத்துவதற்காக, இலங்கை வீரர்கள் வேண்டுமென்றே முகமூடி அணிந்து விளையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இலங்கை வீரர்களின் நடத்தை குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும் கேள்வி எழுப்பிஉள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’கோஹ்லியும், இந்திய அணி நிர்வாகமும், போட்டி தங்கள் கையை விட்டு நழுவி செல்வதை பார்த்தனர். அவர்கள் நேரத்தை இழந்து கொண்டே வந்தனர்.

இதனால் டிக்ளேர் செய்துவிட்டனர். இந்த பிரச்னையால்தான் கோஹ்லி தனது கவனத்தை இழந்தார்.

இதன்பின்பே அவர் ஆட்டமிழந்தார். ஆனால் இலங்கை பேட்டிங் செய்தபோது, அவர்களின் 5 பேட்ஸ்மேன்களிடத்திலும் (நேற்று 3 பேர் ஆட்டமிழந்தனர்.

 2 பேர் களத்தில் உள்ளனர்) நான் முகமூடியை பார்க்கவில்லை.

இதை தவிர, பெவிலியனில் அமர்ந்திருந்த இலங்கை வீரர்கள் கூட முகமூடி அணியவில்லை. குறுகிய நேரத்திற்குள்ளாக அனைத்து விஷயங்களும் எப்படி மாறியது? என்பது எனக்கு தெரியவில்லை.

இது எனக்கு சற்றே கவலையளிக்கிறது.

எனினும் அவர்களின் நோக்கம் தவறானதாக இருக்காது என நம்புகிறேன்’’ என்றார்.

.

மூலக்கதை