பல்வேறு பிரச்னைகளால் நேரம் மாறுகிறது: இரவு 8 மணிக்கு பதிலாக 7 மணிக்கே ஐபிஎல் போட்டிகளை தொடங்க திட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பல்வேறு பிரச்னைகளால் நேரம் மாறுகிறது: இரவு 8 மணிக்கு பதிலாக 7 மணிக்கே ஐபிஎல் போட்டிகளை தொடங்க திட்டம்

* நள்ளிரவில் டிவி பார்க்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இனி ஜாலி

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ), ஆண்டுதோறும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஸ்பாட் பிக்சிங் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும், ரசிகர்கள் அளித்து வரும் அமோக ஆதரவினால், ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 10 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. ஒரு நாளில் ஒரு போட்டி மட்டும் நடைபெறுவதாக இருந்தால், இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

2 போட்டிகள் என்றால், மாலை 4 மணிக்கு முதல் ஆட்டமும், இரவு 8 மணிக்கு 2வது ஆட்டமும் தொடங்குவது வழக்கம்.
இரவு 8 மணிக்கு தொடங்கு வதால், முந்தைய காலங்களில் சில சமயம் போட்டிகள் நள்ளிரவு வரை நடைபெற்றுள்ளன.



இதனால் போட்டியை நேரில் காண மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கும், வீடுகளில் தொலைக்காட்சியில் போட்டிகளை ரசிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே போட்டியின் நேரத்தில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பிசிசிஐயின் இந்த திட்டத்திற்கு, தொலைக்காட்சி ஒளிபரப்பாளரான ஸ்டார் இந்தியா ஒப்புதல் வழங்கினால், அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 7 மணிக்கே தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இரவு 7 மணிக்கு போட்டியை தொடங்க ஒப்புதல் கிடைத்து விட்டால், மாலை 4 மணிக்கு தொடங்கப்பட்டு வரும் முதல் போட்டி இனி 3 மணிக்கே தொடங்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.



ஆனால் இதற்கு எல்லாம் தொலைக்காட்சி ஒளிபரப்பாளரின் ஒப்புதல் கிடைக்க வேண்டும். இது குறித்து ஐபிஎல் சேர்மன் ராஜிவ் சுக்லா கூறுகையில், ‘’போட்டிகளை இரவு 7 மணிக்கு தொடங்க அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் முதலில் தொலைக்காட்சி ஒளிபரப்பாளரிடம் நாங்கள் பேச வேண்டியுள்ளது’’ என்றார். போட்டிகளை முன்கூட்டியே தொடங்கும் திட்டத்திற்கு அணி நிர்வாகங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் ெதாலைக்காட்சி ஒளிபரப்பாளரின் கையில்தான் இறுதி முடிவு உள்ளது.


.

மூலக்கதை