கலைவாணர் N.S.கிருஷ்ணன் நினைவலைகள்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கலைவாணர் N.S.கிருஷ்ணன் நினைவலைகள்

"என் கடன் களிப்பூட்டல்".....1949ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி கலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்கள் வானொலியில் ஆற்றிய உரை....

மக்களுக்குச் சிரிப்பூட்டுவது இந்த காலத்திலே மிகக் கஷ்டமான காரியம் என்பதை நான் நன்றாக அனுபவபூர்வமாக அறிந்து கொண்டிருக்கிறேன். முதலிலே நான் திரைப்பட உலகில் பிரவேசித்த போது, இந்தக் காரியம் ரொம்பவும் லகுவாக நடைபெற்று வந்தது.

தட்சயக்ஞம்" என்ற படத்தில் ' நான் கூப்பிட்டுகிட்டே இருக்கேன் நீ பேசாமல் நின்னுகிட்டேயிருந்தால் என்ன அர்த்தம்?' என்று சொன்னேன்! இதற்கு ஒரு சிரிப்பு...

ஆரியமாலா"வில் 'அய்யோடா,சேட்டன் கிளியாயில்லே! பாருங்க', இதற்கு ஒரு கைதட்டல்...

அசோக்குமார்" படத்திலே, ' இவரு சொன்னா சொன்னது தான்,எவரு? இவரு!' இவ்வளவு தான். ஒரே ஆமோதிப்பு...

சகுந்தலா" படத்தில், 'காலையில எந்திருச்சி கஞ்சித் தண்ணி இல்லாமக் கஷ்டப்படுகிறேன் கடவுளே! கொஞ்சம் கண்ணைத் திறந்து பாரு கடவுளே! என்னை இப்பிறப்பு பிறக்க வச்சே கடவுளே!' என்னும் பாட்டைக் கேட்டதும் ஒரே குதூகலம்....

கண்ணகி" படத்திலே, ' என்ன ஆச்சரியம்!' இவ்வளவு தான் ஏக ஆமோதிப்பு...

பவளக்கொடி" படத்திலே, ' பரமசிவன்க்கி பார்வதி கங்கா தோ பத்தினி ஹே! எனக்கு ஒண்ணும் நஹிஹே! க்யா கர்னா பகவான்! இதுக்கு ஒரே குதூகலம்,கை தட்டல், ஆமோதிப்பு, சிரிப்பு எல்லாம்....

இதெல்லாம் கடந்த கால ஹாஸ்யத் துணுக்குகள். இப்போ இவ்வளவு ஹாஸ்யங்களையும் வேறொரு வடிவில் ஒன்றாக இணைத்துக்கட்டி உங்கள் முன் வைத்தால் கூட சிரிக்க மாட்டீர்கள். காரணம், உங்கள் அறிவின் முதிர்ச்சியும் சிந்தனையின் பெருக்கமும் தான்.

இப்போது மக்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்து மகிழ வேண்டுமானால் அந்தப் பணியைச் செய்யும் கலைஞருக்கு பல துறைகளில் தேர்ச்சியும் தெளிந்த அறிவும் வேண்டும்.

'அரசியல் துறையிலே, சமூக விவகாரங்களிலே, அறநெறிகளிலே, இலக்கியத் துறையிலே, சரித்திர ஆராய்ச்சியோடு சயன்ஸும் கொஞ்சம் தெரிந்து இருக்க வேண்டும்.இப்படிப் பல்வேறு துறைகளிலும் முறையான ஞானமிருந்தால் மட்டுமே மக்களைச் சிரிப்பூட்ட வைக்கும் சிறந்த நகைச்சுவைக் கலைஞனாக சோபிக்க முடியும்.!

எனக்கு மட்டும் அதிலிருந்து விதி விலக்கு உண்டு. ஏன்னா, அனுபவ பாத்தியதை தான் காரணம். அனுபவமும் கொஞ்ச நாளா?! இருபது வருஷமல்லவா! அதனால தான் ரேடியோ காரர்களும் என்னை கூப்பிட்டு பேசச் சொன்னாங்க. ஏன் தெரியுமா? நான் பேசுனா நீங்க எல்லாம் விழுந்து விழுந்து சிரிப்பிங்களாம், அப்படின்னு நினைப்பு. ஆனா நீங்க பேசாம உட்கார்ந்து இருந்தீங்கன்னு இவங்களுக்கு எப்படி தெரியும்? இவங்க இங்கே தானே இருக்காங்க? நல்லவேளை.... இங்க எல்லாம் சிரிக்கிறாங்க! இந்த கவுரவத்தோடு நான் பேச்சை நிறுத்திக்கிறேன்.'

அடேயப்பா என்ன நக்கல் நையாண்டி.. காலம் கடந்த பின்பு தன்னுடைய நகைச்சுவையே எடுபடாது என்று ஒப்புக் கொண்ட நேர்மை...ஒரு காமெடியன் பல் துறை வித்தகனாக இருக்க வேண்டும் என்ற தேடல்...

மாறி வரும் காலத்திற்கு ஏற்ப மக்களின் அறிவு மேம்பட நகைச்சுவையும் மேம்பட வேண்டும் என்ற ஞானம்...சயன்ஸும் தெரியணும் எனறு அப்போதே விஞ்ஞான உலகை பற்றிய கணிப்பு... அடடா கலைவாணர் என்னும் மாமேதை வாழ்ந்த நாட்டில் வாழ்கிறோம் என்பதே நமக்கு கிடைத்த பெருமை அல்லவா... கலைவாணரைப் போற்றுவோம்.!

நன்றி......
முத்துராமன் அவர்கள் எழுதிய "சிரிப்பு டாக்டர்" புத்தகத்திலிருந்து....


மூலக்கதை