ஏரல் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி லாக்கரை உடைக்க முடியாததால் ₹15 கோடி பணம், நகை தப்பியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஏரல் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி லாக்கரை உடைக்க முடியாததால் ₹15 கோடி பணம், நகை தப்பியது

ஏரல், நவ. 29-: ஏரல் அருகே வங்கி ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், லாக்கரை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

இதனால் சுமார் ரூ. 15 கோடி நகை, பணம் தப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே கொற்கை மெயின் ரோட்டில், தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கி உள்ளது. நேற்று முன்தினம் ஊழியர்கள் வேலை முடிந்து மாலையில் வங்கியை பூட்டிச் சென்றனர்.

நேற்று காலை ஊழியர்கள் வங்கியை திறக்க வந்தபோது வங்கி ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.   போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் வங்கி ஜன்னல் கண்ணாடியை உடைத்தும், அதில் உள்ள கம்பிகளை வெல்டிங் மிஷினால் வெட்டி எடுத்தும் மர்ம நபர்கள் வங்கிக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் வங்கியில் அலாரம் அடிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள மணி வயர்களை துண்டித்துள்ளனர்.

தொடர்ந்து வங்கி லாக்கரை உடைக்க முயன்று, அது முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. இதனால் வங்கி லாக்கரில் இருந்து சுமார் ரூ. 15 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் தப்பியுள்ளது. தொடர்ந்து போலீசார், வங்கியில் உள்ள கேமராவில் பதிவானவற்றை ஆராய்ந்தனர்.

அதில் 2 மர்மநபர்கள் வங்கிக்குள் வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகி இருந்தன. மர்மநபர்களில் ஒருவன் பிளாஸ்டிக் கேரி பேக்கை தலையில் கவிழ்த்தி கொண்டு நிற்பது கேமராவில் பதிவாகி உள்ளது.

தடயவியல் நிபுணர் நாகரத்தினம் கைரேகைகளை பதிவு செய்தார்.

துப்பறியும் நாய் கோகோ வங்கியில் இருந்து மோப்பம் பிடித்து பின்னால் உள்ள தோட்டத்தில் கொள்ளையர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் கேரி பேக்கை கவ்வியது.

இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேமராவில் பதிவான உருவங்களை கொண்டு மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

.

மூலக்கதை