பின் தொடரும் நிழல்!மது விற்பனை தொகையின் மீது ஆசை:அடுத்தடுத்து வழிப்பறியால் அதிர்ச்சி

தினமலர்  தினமலர்
பின் தொடரும் நிழல்!மது விற்பனை தொகையின் மீது ஆசை:அடுத்தடுத்து வழிப்பறியால் அதிர்ச்சி

கோவை:கொள்ளையடிப்பதும், குடித்துக்களிப்பதுமாகவுள்ள கொள்ளையர்களுக்கு தற்போது, டாஸ்மாக் மதுக்கடைகளின் மது விற்பனைத் தொகை மீது ஆசை வந்திருக்கிறது. பணத்தை கொண்டு செல்லும் ஊழியர்களை நிழல்போல் பின்தொடர்ந்து, கொலை வெறியோடு தாக்கி, பணத்தை கொள்ளையடிப்பது அதிகரித்திருக்கிறது. இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மொத்தம், 237 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. அவை, கவுண்டம்பாளையத்தை தலைமை இடமாகக் கொண்டு, 136 கடைகளுடன் கோவை வடக்கு மாவட்டம் என்றும்; பொள்ளாச்சியை தலைமை இடமாகக் கொண்டு கோவை தெற்கு மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு மதுக்கடைக்கு, ஒரு சூப்பர் வைசர், இரண்டு சேல்ஸ்மேன்கள் எனக் குறைந்தபட்சம் மூன்று பேரும்; அதிக விற்பனையாகும் கடைகளில் அதிகபட்சம் ஐந்து பேர் வரையிலும், சுமார் 780 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.மதுக்கடைகளில் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாயில் துவங்கி, 10 லட்சம் வரையிலும் விற்பனை நடக்கின்றன.
விற்பனை மூலம் வசூலாகும் பணத்தை, அந்தக் கடையின் சேல்ஸ்மேன்கள், கடையில் உள்ள 'லாக்கர்'களில் பூட்டி வைத்து; மறுநாள் வங்கியில் செலுத்த வேண்டும்.'ஸ்டேட்மென்ட்'களுடன் வங்கி இருப்புத் தொகைக்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான் டாஸ்மாக் நிர்வாகத்தின் உத்தரவு. ஆனால், 'டெண்டர்' மூலம் தனியார் தான் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில், 'பார்'களை நடத்துகின்றனர். சில இடங்களில், போலீசாரை நன்கு கவனித்து விட்டு, இரவு 12:00 மணி வரை பார்களை நடத்துகின்றனர். பார்களில் 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
எனவே, பணத்தை கடைகளில் வைத்தால் களவுபோகும் என்ற அச்சத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் பணத்தை பத்திரமாக தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்று, தம் வசமே வைத்திருந்து, மறுநாள் வங்கியில் செலுத்துகின்றனர்.
இவர்கள் தினமும், 10:00 மணிக்கு கடையில் விற்பனையை முடித்து, வரவை ஒழுங்குபடுத்தி, இருப்பை சரிபார்த்து வீட்டிற்கு கிளம்ப, இரவு 11:00 மணிக்கு மேல் ஆகிறது.ஊழியர்கள் வீட்டுக்கு எப்போது செல்கின்றனர் என்பதை வேவுபார்த்து அறிந்துகொள்ளும் கொள்ளையர்கள், ஊழியரை பின்தொடர்ந்து சென்று மறித்து; அவரை தாக்கி, பணத்தை பறித்துச்செல்கின்றனர். இம்மாதிரியான சம்பவங்கள் கோவையில் தற்போது அதிகரித்துள்ளன.கடந்த ஆண்டு கோவை சின்னவேடம்பட்டி அருகிலுள்ள உடையாம் பாளையத்தில், கடையின் மேலே கூரையைப் பிரித்து இறங்கிய கொள்ளையர்கள், அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். குரும்பப்பாளைய டாஸ்மாக் கடையில் (எண் :1560), நள்ளிரவு, 1.85 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக் கப்பட்டது.
அதேபோல், சின்னியம்பாளைய கடை (எண்: 2251) ஊழியர் பணத்தை வங்கியில் செலுத்த சென்றபோது, பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி துாவி கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.சில நாட்கள் முன், கோவை வடக்கு மாவட்டத்தில் உள்ள அன்னுார் மற்றும் கோவில்பாளையம் கடைகளில் இதேபோன்ற கொள்ளை சம்பவம் நடந்தன. வழிப்பறியில் ஊழியரை தாக்க, 2.70 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.மற்றொரு கடையில், நள்ளிரவில் பின்வாசல் வழியே கடைக்குள் புகுந்து, அட்டைப்பெட்டிகளில் பணத்தை தேடி குத்திக்குதறி தாறுமாறாக மது பாட்டில்களை உடைத்துப்போட்டு சென்ற சம்பவமும் நடந்திருக்கிறது.
சமீபத்தில், கடந்த நவ., 22ல் பொள்ளாச்சி அருகே பனப்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை (எண்: 2284) சேல்ஸ்மேன்கள் அய்யாச்சாமி மற்றும் முருகேசன் ஆகியோர், பனப்பட்டியிலிருந்து வடசித்துார் நோக்கி, நள்ளிரவில் வசூலான பணத்துடன் டூவீலரில் சென்றனர்.அப்போது, கொள்ளையர்கள் அரிவாளால் இருவரையும் வெட்டிவிட்டு, பணத்தை பறித்துச்சென்றுவிட்டனர். காயமடைந்து நடுவழியில் தவித்துக் கொண்டிருந்த ஊழியர்களை, ரோந்துப் பணியில் ஈடுபட்ட, நெகமம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மீட்டார். இப்படி அடுத்தடுத்து நடக்கும் கொள்ளை சம்பவங்களால், டாஸ்மாக் ஊழியர்கள் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் உறைந்துள்ளனர்.
இதுகுறித்து டாஸ்மாக் மண்டல அதிகாரி ஒருவர் கூறுகையில், 'டாஸ்மாக் கடைகள் அனைத்தும், இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளன. எனவே, கொள்ளை போனாலோ, சேதாரமானாலோ அதை நிர்வாகம் மீட்டுவிடும், அல்லது ஈடுகட்டிவிடும். எனவே, ஊழியர்கள் பணத்தை வீட்டிற்கு எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். இரவுக்காவல் பணி குறித்து பரிசீலனை செய்யப்படும். சென்னை போன்ற நகரங்களில் நேரடியாக வசூலிக்கும் ஏற்பாட்டைப்போல், இங்கும் முயற்சிக்கிறோம்' என்றார்.
பாதுகாப்பில்லை!
கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு.,) செயலாளர் ஜான் அந்தோணிராஜ் கூறியதாவது:இரவு 10:00 மணிக்கு மேல், கடைகளை பூட்டிவிட்டு சென்று விடுவோம். கடைகள் அனைத்தும் தற்போது ஊர்களை விட்டு தள்ளியிருப்பதால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே, முன்னாள் ராணுவத்தினரை இரவு காவலர்களாக டாஸ்மாக் நிர்வாகம் நியமிக்க வேண்டும்.
வசூலாகும் பணத்தை பாதுகாப்பு கருதி, டாஸ்மாக் நிர்வாகமே ஆட்களை அனுப்பி கடைகளில் வந்து பெற்றுச்செல்ல வேண்டும். சென்னை போன்ற மாவட்டங்களில் இந்த நடைமுறை உள்ளது. கொள்ளை போகும் பணத்திற்கான பொறுப்பை, ஊழியர்களின் தலையில் சுமத்தாமல், உரிய வழக்குப்பதிவு செய்து, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர்களின் உயிருக்கும் உடமைக்கும் நிர்வாகம் தகுந்த பாதுகாப்பளிப்பது அவசியத்தேவையாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை