நாக்பூர் டெஸ்ட் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 205 ரன்னில் சுருண்டது

தினகரன்  தினகரன்

நாக்பூர் : இந்திய அணியுடனான 2வது டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன் எடுத்துள்ளது. இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இந்திய அணியில் புவனேஷ்வர், ஷமி, தவானுக்கு பதிலாக இஷாந்த், ரோகித், முரளி விஜய் இடம் பெற்றனர். இலங்கை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. சமரவிக்ரமா, கருணரத்னே இருவரும் இன்னிங்சை தொடங்கினர். சமரவிக்ரமா 13 ரன் எடுத்து இஷாந்த் வேகத்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திரிமன்னே 9 ரன் மட்டுமே எடுத்து அஷ்வின் சுழலில் கிளீன் போல்டானார். அதிரடி ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் 10 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் வெளியேற, இலங்கை அணி 60 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.இந்த நிலையில், கருணரத்னே - கேப்டன் சண்டிமால் ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 62 ரன் சேர்த்தது. கருணரத்னே 51 ரன் எடுத்து (147 பந்து, 6 பவுண்டரி) இஷாந்த் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து வந்த டிக்வெல்லா 24 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, ஷனகா 2 ரன், தில்ருவன் 15 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடி அரை சதம் அடித்த சண்டிமால் 57 ரன் எடுத்து (122 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) அஷ்வின் சுழலில் பலியானார்.ஹெராத் 4 ரன், லக்மல் 17 ரன் எடுத்து ஆட்டமிழக்க, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னுக்கு சுருண்டது (79.1 ஓவர்). இந்திய பந்துவீச்சில் அஷ்வின் 4, இஷாந்த், ஜடேஜா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன் எடுத்துள்ளது (8 ஓவர்). லோகேஷ் ராகுல் 7 ரன் எடுத்து கமகே பந்துவீச்சில் கிளீன் போல்டானார். முரளி விஜய், செதேஷ்வர் புஜாரா தலா 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. கருணரத்னே 10002017 டெஸ்ட் சீசனில், 1000 ரன் கடந்த 2வது தொடக்க வீரர் என்ற பெருமை இலங்கையின் கருணரத்னேவுக்கு கிடைத்துள்ளது. அவர் தனது 23வது இன்னிங்சில் இந்த மைல்க்கல்லை எட்டியுள்ளார். தென் ஆப்ரிக்காவின் டீன் எல்கர் 20 இன்னிங்சில் 1097 ரன் எடுத்துள்ளார்.* இலங்கை பேட்ஸ்மேன் லாகிரு திரிமன்னே, சர்வதேச கிரிக்கெட்டில் 12வது முறையாக அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார். அஷ்வின் அதிக முறை ஆட்டமிழக்கச் செய்த பேட்ஸ்மேன் அவர் தான் (ஒருநாள் போட்டிகளில் 6, டெஸ்டில் 5, டி20ல் ஒரு முறை).

மூலக்கதை