டிஎன்சிஏ ரூ.18 கோடி டெபாசிட் செய்ய உத்தரவு

தினகரன்  தினகரன்

சென்னை : சேப்பாக்கம் மைதானத்திற்கு ரூ.1553 கோடி வாடகை செலுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) தொடர்ந்த வழக்கில், வங்கிக் கணக்கில் ரூ.18 கோடியை நிரந்தர வைப்பாக டெபாசிட் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ரவிச்சந்திர பாபு, ‘டிஎன்சிஏ ரூ.16 கோடியே  30 லட்சமும், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) ரூ.2 கோடியே 60 ஆயிரமும் அவர்களின் வங்கிக் கணக்கில் நிரந்தர வைப்பாக டெபாசிட் செய்ய வேண்டும். இந்த தொகையை நீதிமன்ற உத்தரவில்லாமல் எடுக்கக் கூடாது. இந்த தொகை டெபாசிட் செய்யப்பட்டால் டிஎன்சிஏ மற்றும் எம்சிசி அமைப்புகள் முடக்கி வைக்கப்பட்டுள்ள அவர்களின் வங்கிக் கணக்கை மீண்டும் பயன்படுத்தலாம்’ என்றார்.அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய நாராயண் ஆஜராகி, இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சம்மந்தப்பட்ட வருவாய்துறை அதிகாரிகள் கிரிக்கெட் சங்கத்தின் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்று உறுதியளித்தார். இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதி, இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பதற்கு இந்த இடைக்கால உத்தரவு தடையாக இருக்காது என்று உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரங்களுக்குத் தள்ளிவைத்தார்.

மூலக்கதை