ஸ்மித் - மார்ஷ் ஜோடி பொறுப்பான ஆட்டம் ஆஸ்திரேலியா 165/4

தினகரன்  தினகரன்

பிரிஸ்பேன் : இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்துள்ளது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 302 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து, முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்திருந்தது. நேற்று தொடர்ந்து விளையாடிய அந்த அணி, முதல் இன்னிங்சில் 302 ரன் குவித்து (116.4 ஓவர்) ஆல் அவுட்டானது. ஸ்டோன்மேன் 53, வின்ஸ் 83, மாலன் 56, மொயீன் 38, பிராடு 20 ரன் எடுத்தனர்.ஆஸ்திரேலிய பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் தலா 3, நாதன் லயன் 2, ஹேசல்வுட் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 24.5 ஓவரில் 76 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. பேங்க்ராப்ட் 5, கவாஜா 11, வார்னர் 26, ஹேண்ட்ஸ்கோம்ப் 14 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இந்த நிலையில், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் - ஷான் மார்ஷ் ஜோடி 5வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 2ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்துள்ளது. ஸ்மித் 64 ரன், மார்ஷ் 44 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன், பிராடு, மொயீன், ஜேக் பால் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மூலக்கதை