நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுமா தமிழகம்?

தினகரன்  தினகரன்

வதோதரா : பரோடா அணியுடன் இன்று தொடங்கும் ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில், போனஸ் புள்ளியுடன் வென்றால் கூட மற்ற அணிகளின் செயல்பாட்டை பொறுத்தே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் தமிழகம் களமிறங்குகிறது. சி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி, இதுவரை விளையாடி உள்ள 5 போட்டியிலும் டிரா செய்து 11 புள்ளிகளுடன் 4வது இடத்தில் பின்தங்கியுள்ளது. ஆந்திரா 6 போட்டியில் 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. மத்திய பிரதேசம் (15), மும்பை (14) புள்ளிகளுடன் அடுத்த இடங்களில் உள்ளன. இந்த நிலையில், கடைசி லீக் ஆட்டத்தில் பரோடாவை எதிர்கொள்ளும் தமிழகம் சாதாரணமாக வென்றால், மும்பை மற்றும் மத்திய பிரதேச அணிகள் தோற்பதை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும். தமிழகம் போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற்றாலும், மத்திய பிரதேசம் தோற்க வேண்டும், மும்பை அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை மட்டுமே பெற வேண்டும் என்று இடியாப்ப சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அதே போல, மும்பை அணியும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற கட்டாய வெற்றி என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது. ஏ பிரிவில் கர்நாடகா (26), டெல்லி (24) அணிகள் ஏற்கனவே கால் இறுதிக்கு முன்னேறிவிட்டன. பி பிரிவில் குஜராத் (27), கேரளா (24), சவுராஷ்டிரா (23) அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. கடைசி லீக் ஆட்டத்தின் முடிவைப் பொறுத்தே இந்த அணிகளின் தலைவிதி முடிவாகும். டி பிரிவில் விதர்பா (28) நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில், பெங்கால் (20) மற்றும் பஞ்சாப் (15) அணிகள் 2வது இடம் பிடிக்க வரிந்துகட்டுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே கால் இறுதிக்கு முன்னேற முடியும்.

மூலக்கதை