28–ந்தேதி, உலக தொழில் முனைவோர் மாநாடு ஐதராபாத்துக்கு பிரதமர் மோடி, டிரம்ப் மகள் வருகை

PARIS TAMIL  PARIS TAMIL
28–ந்தேதி, உலக தொழில் முனைவோர் மாநாடு ஐதராபாத்துக்கு பிரதமர் மோடி, டிரம்ப் மகள் வருகை

உலக தொழில் முனைவோர் மாநாட்டுக்காக, பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மகள் ஆகியோர் ஐதராபாத்துக்கு வருவதால், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் வருகிற 28–ந்தேதி உலக தொழில் முனைவோர் மாநாடு தொடங்குகிறது. இதற்காக, அன்று ஐதராபாத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, முதலில் மியாபூர் என்ற இடத்தில் ஐதராபாத் மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.

பின்னர், உலக தொழில் முனைவோர் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். ஐதராபாத் சர்வதேச மாநாட்டு மையத்தில் 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது. பெண் தொழில் அதிபர்களை ஊக்குவிக்கும்வகையில் இம்மாநாடு நடக்கிறது. மோடி உள்ளிட்ட 101 சிறப்பு விருந்தினர்களுக்கு பலக்னுமா அரண்மனையில் சிறப்பு விருந்து நடைபெறுகிறது.
டிரம்ப் மகள்

உலக தொழில் முனைவோர் மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் ஆலோசகரும், அவரது மகளுமான இவாங்கா டிரம்ப் கலந்து கொள்கிறார்.

இதற்காக அவர் வருகிற 27–ந்தேதி நள்ளிரவு 1.45 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் ஐதராபாத்தில் உள்ள ‌ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார்.

அவருடன் அதே விமானத்தில் அமெரிக்காவை சேர்ந்த 170–க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களும் வர உள்ளனர். இவாங்கா முதலீட்டாளர்களுடன் ஒரு சாதாரண பயணியாகவே இந்தியாவுக்கு வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐதராபாத்தில், இவாங்கா தனது சொந்த வாகனங்களை பயன்படுத்த உள்ளார்.
மாறுவேட போலீசார்

இவாங்கா வருகையை முன்னிட்டு ஐதராபாத் நகரம் முழுவதும் ரகசிய பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ ரெயில் திட்டம், உலக தொழில் முனைவோர் மாநாடு ஆகிய 2 நிகழ்ச்சிகளிலும் 2,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

அமெரிக்காவில் இருந்து வரும் ரகசிய போலீஸ் பிரிவை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். இதுதவிர நகர் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாறுவேட போலீசார் உலா வர உள்ளனர்.

இவாங்கா செல்லும் இடங்களில் அடிக்கு 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அமெரிக்க அதிகாரிகளும் தாங்கள் சொந்தமாக கேமராக்கள் ஏற்பாடு செய்து கண்காணிக்க இருப்பதாக தெரிகிறது. ஆள் இல்லா விமானம் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது.
பரிசு பொருட்களுக்கு தடை

கச்சி பவுனியில் உள்ள வெஸ்டின் ஓட்டலில் இவாங்கா தங்க உள்ளார். அந்த ஓட்டல் முழுவதும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஓட்டலில் இவாங்கா தங்க உள்ள ஸ்பெ‌ஷல் பிரசிடென்சி சூட்டில் உள்ள கண்ணாடிகளுக்கு உட்புறம் கூடுதலாக குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்தப்பட்டு உள்ளது. ஓட்டல் முழுவதும் பாதுகாப்புக்காக அமெரிக்கா அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள்.

முக்கிய பிரமுகர்கள் இவாங்காவுக்கு அளிக்கும் பரிசுகளையும் அதிகாரிகள் சோதனையிட உள்ளனர். காஷ்மீரில் தயாராகும் பசிமெனு சால்வைகள், குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட பொருட்களை பரிசாக வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மாநாட்டில் பங்கேற்ற பிறகு, நாளை இரவே இவாங்கா ஐதராபாத்தில் இருந்து புறப்படுகிறார்.

மூலக்கதை