மணப்பாக்கம் குடிநீர் திட்டத்திற்கு கிடைத்தது... விடிவு! மூன்றாண்டுகள் இழுபறிக்கு பின் பணி துவக்கம்

தினமலர்  தினமலர்
மணப்பாக்கம் குடிநீர் திட்டத்திற்கு கிடைத்தது... விடிவு! மூன்றாண்டுகள் இழுபறிக்கு பின் பணி துவக்கம்

ஆலந்துார் : நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து, மணப்பாக்கம் குடிநீர் திட்ட பணிகள், மூன்று ஆண்டுகள் இழுபறிக்கு பின், தற்போது மீண்டும் துவங்கி உள்ளது. இந்த பணிகளை, ஓராண்டிற்குள் முழுமையாக முடிக்க குடிநீர் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை, ஆலந்துார் மண்டலம், 157வது வார்டு, மணப்பாக்கத்தில், 220 சாலைகள் உள்ளன. இங்கு, 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளும், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் திட்ட பணிகளை செயல்படுத்த, 10.92 கோடி ரூபாயை, தமிழக அரசு, 2013ல் ஒதுக்கியது. இதற்கான பணிகள், 2014ம் ஆண்டில் துவங்கப்பட்டன. இதில், மொத்தம், 26.13 கி.மீ., துாரத்திற்கு குடிநீர் குழாய் பதித்தல், 11 லட்சம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும், இரண்டு லட்சம் லிட்டர் கீழ்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டதிட்டமிடப்பட்டது.
மணப்பாக்கம், கிரிக்கோணி நகரில், 1.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் மற்றும் மேக்ரோமார்வெல் நகர் என இரண்டு இடங்களில், நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட திட்டமிடப்பட்டது.நீர்நிலை பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்க, இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக, நீர்நிலை பகுதியில் நீர்த் தேக்க தொட்டி கட்டுவது கைவிடப்பட்டது. இதனால், ஓராண்டிற்கு பணிகள் நடைபெறவில்லை.இதனால், கட்டுமான திட்டம் மாற்றம் செய்யப்பட்டு, இரண்டு இடங்களில் கட்டப்பட இருந்த தொட்டி, மேக்ரோமார்வெல் நகரில் ஒரே தொட்டியாக கட்ட திட்டமிடப்பட்டது. அங்கு பூங்கா மற்றும் நலச்சங்க கட்டடம் உள்ள வளாகத்தில், 24,575 சதுர அடி பரப்பளவு கொண்ட திறந்த வெளி உள்ளது. இதில், 2,600 சதுர அடி இடத்தில், நீர்த்தேக்க தொட்டி கட்ட, 2015 மார்ச், 2ல், பூமி பூஜை போடப்பட்டது.இந்த பணியை, ஜி.கே.சி., விஸ்வா என்ற நிறுவனம் துவங்கியது.

ஒரே இடத்தில், கீழ்நிலை மற்றும் மேல்நிலை தொட்டி கட்டுவதால், கூடுதல் இடம் தேவைப்பட்டது. இதனால், துவங்கிய நிலையிலேயே இந்த பணிகளும் முடக்கின.கூடுதலாக தேவைப்படும், 1,900 சதுர அடி பரப்பளவு இடத்தை, நலச்சங்க கட்டடத்தை ஒட்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது.இதற்கு, இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின், பூங்காவின் ஒரு பகுதியை இடித்து வழங்க, மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கும், பகுதி மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, மாற்று இடம் கிடைக்காததால் குடிநீர் திட்ட பணி கைவிடும் நிலை ஏற்பட்டது. பலகட்ட பேச்சுக்கு பின், பூங்கா இடத்தில், 1,900 சதுர அடி பரப்பளவை, நீர்த்தேக்க தொட்டி கட்ட ஒதுக்குவது என, முடிவு செய்யப்பட்டது. குடிநீர் வாரியம், மாநகராட்சி இணைந்து, இதற்கான கோப்புகளை தயார் செய்து, நிலம் மற்றும் உடைமை துறைக்கு அனுப்பி வைத்தன. அங்கு, இரண்டு ஆண்டுகளாக கோப்புகள் நகராமல் கிடந்தன. இந்நிலையில், இரண்டு மாதத்திற்கு முன், இது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இதையடுத்து, இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட குடிநீர் திட்ட பணிகளுக்கு தற்போது விடிவு கிடைத்துள்ளது. ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து பணிகளும் முடித்து, இத்திட்டம் பயன்பாட்டிற்கு வர ஒன்றரை வாய்ப்புள்ளது.
ஓராண்டுக்குள் முடியும்!
பல தெருக்களில், குழாய் பதித்துள்ளோம். இடப்பிரச்னையால், நீர்த்தேக்க தொட்டி கட்டுவதில் இழுபறி ஏற்பட்டது. அரசாணை வந்ததால், தொட்டி கட்டும் பணியை வேகப்படுத்தி உள்ளோம். ஓராண்டுக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
-குடிநீர் வாரிய அதிகாரிகள்

மூலக்கதை