மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் விடுவித்தது

தினகரன்  தினகரன்

லாகூர் : மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா தீவிரவாத இயக்க தலைவர் ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் விடுதலை செய்தது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குலின் 9வது நினைவு தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தய்பா தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரான ஹபிஸ் சயீத் மூளையாக செயல்பட்டார். தற்போது இவர்  ஜமாத் உத் தவா என்ற புதிய அமைப்பை உருவாக்கி, அதன் தலைவராக இருக்கிறார். இவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்துள்ள அமெரிக்கா, சயீத்தின் தலைக்கு ரூ.65 கோடி பரிசு அறிவித்துள்ளது. ஐநாவும் அவரை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. சயீத்தையும், அவருடைய 3 கூட்டாளிகளையும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண அரசு பல மாதங்களக வீட்டுக் காவலில் வைத்திருந்தது. அவர் மீது வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லாததால், வீட்டுக் காவலை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை கூறி நீதிமன்றம் அவரை சில தினங்களுக்கு முன் விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, வீட்டுக்காவலில் இருந்த சயீத் நேற்று விடுவிக்கப்பட்டார். இதை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினார்கள். அப்போது இந்தியாவுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் இடையே பேசிய சயீத், ‘‘கடந்த 10 மாதமாக காவலில் வைக்கப்பட்டு இருந்தேன். இதனால் காஷ்மீர் மக்களுக்காக போராட முடியாத நிலை இருந்தது. இனி நாடு முழுவதும் உள்ள மக்களை ஒருங்கிணைத்து காஷ்மீர் விடுதலைக்காக போராடுவேன். அமெரிக்காவின் நெருக்கடி காரணமாகவே பாகிஸ்தான் என்னை கைது செய்தது’’ என்றார்.

மூலக்கதை