அனுமதி பெறாமல் சீட் வழங்கிய விவகாரம் : 150 மருத்துவ மாணவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : அனுமதி இல்லாமல் 150 மாணவர்களுக்கு இடம் அளித்த விவகாரத்தில், அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்கும்படி லக்னோ மருத்துவக் கல்லூரிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஜிசிஆர்ஜி என்ற மருத்துவ கல்லூரி உள்ளது. இதற்கு மத்திய அரசு முறையான அனுமதி வழங்கவில்லை. அங்கு போதுமான கட்டமைப்பு வசதி இல்லை என்ற புகாரின் அடிப்படையில், மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை வழங்க இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்து விட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, இந்த வழக்கை முறைப்படி விசாரித்து தீர்ப்பு வழங்கும்படி அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து, இந்த கல்வியாண்டில் 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், அலகாபாத் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்து ஓய்வு பெற்ற நீதிபதி குவாத்தூசியை சிபிஐ திடீரென கைது செய்தது. மேலும் புதுச்சேரியில் பணியாற்றும் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பி.ஆர் பாபு, நரேந்திரகுமார் ஆகியோர் உள்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். லக்னோ மருத்துவ கல்லூரிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க இவர்கள் பணம் பெற்றதாக சிபிஐ நடவடிக்கை எடுத்தது.இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து அப்போது, அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு கடும் கண்டனம்  தெரிவித்த நீதிபதிகள். சட்ட விரோதமாக மாணவர் சேர்க்கை நடத்திய கல்லூரிக்கு அபராதமும் விதித்தனர். இது தொடர்பாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை மீறி அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை நடத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இது நிர்வாக ரீதியிலான பிரச்னையை உருவாக்கும். எனவே, நீதிமன்ற நிர்வாக தரப்பில் தனியாக இது பற்றி விசாரணை நடத்தப்படும். மருத்துவ மாணவர்களை அனுமதியின்றி சேர்த்ததற்காக லக்னோ கல்லூரி 150 மாணவர்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும், அபராதமாக ரூ.25 லட்சத்தை உச்ச நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். இந்த கல்லூரியில் அடுத்த கல்வியாண்டில் (2018-19) மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மூலக்கதை