பிரிவினைவாதிகளை போல் பேசி ராணுவத்தின் உறுதியை சீர்குலைக்கிறது காங்கிரஸ்

தினகரன்  தினகரன்

அகமதாபாத் : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர்கள் பிரிவினைவாதிகளை போல பேசுகிறார்கள். நாட்டை பிரிக்க நினைப்பவர்களுடன் ஆர்வமாக அவர்கள் இணைந்து விட்டார்கள். நாட்டை பிரிக்கக் கோரி, ஜேஎன்யு மாணவர்களை ராகுல் காந்தி தவறாக வழி நடத்துகிறார். காஷ்மீரில் அமைதி நடவடிக்கைகளுக்கு எதிராக ராணுவம் நடந்து கொள்வதாக உள்துறை அமைச்சராக இருந்த (ப.சிதம்பரம்) காங்கிரஸ் தலைவர் கூறுகிறார். ராணுவ தளபதி குண்டரைப் போல் செயல்படுவதாக அக்கட்சியின் மற்றொரு தலைவர் (சந்தீப் தீக்‌ஷித்) கூறுகிறார். இதுபோல, ராணுவத்தின் மன உறுதியையும், நன்மதிப்பையும் சீர்குலைக்க காங்கிரஸ் எப்போதுமே தயாராக இருக்கிறது.நாட்டின் நலனுக்காக பாடுபடும் பிரதமர் மோடியை டீ விற்பவர் என கூறி கிண்டல் செய்கிறார்கள். இதுபோன்ற விமர்சனங்களால் காங்கிரஸ் தன்னை தானே சேதப்படுத்திக் கொள்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துகளை கூறி படுதோல்வியை சந்திக்கிறார்கள். அந்த தவறை ஒருபோதும் திருத்திக் கொள்ளத் தவறுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை