உபி.யில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 3 பேர் பலி

தினகரன்  தினகரன்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இருந்து 250 கிமீ தொலைவில் அமைந்துள்ள சித்ரகூட்  மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை வாஸ்கோடகாமா - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் அதிகாலை 4.18 மணிக்கு ரயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகின. இதனால், 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 6 வயது சிறுவன், அவனது தந்தை மற்றும் பெண் ஒருவர் என 3 பேர் பலியாகினர். மேலும், 9 பேர் காயமடைந்தனர்.  அவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்ததே ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. விபத்து காரணமாக பாட்னா-அலகாபாத் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், சிறிய காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது.  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும்வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை