ஜெய்ப்பூர் கோட்டையில் தொங்கிய சடலம் பத்மாவதி பட எதிர்ப்பாளர்களை எச்சரித்த வாசகத்தால் பரபரப்பு

தினகரன்  தினகரன்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் கோட்டை மதில் சுவரில் தூக்கில் தொங்கிய சடலத்தின் அருகே, ‘பத்மாவதி’ பட எதிர்ப்பாளர்களை எச்சரித்து வாசகம் எழுதப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானின் சித்துர்கர் ராணி பத்மினியின் வரலாற்றை மையமாக வைத்து, ‘பத்மாவதி’ பாலிவுட் படத்தை இயக்குனர் பன்சாலி இயக்கி உள்ளார். இப்படம், ராணி பத்மினியின் வீர வரலாற்றை தவறாக சித்தரிப்பதாக கூறி, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் நாஹர்கர் கோட்டை மதில் சுவரில் சடலம் ஒன்று நேற்று தொங்கியது. அதன் அருகே பாறையில், ‘நாங்கள் வெறும் உருவபொம்மையை தூக்கிலிடுபவர்கள் அல்ல என்பதை பத்மாவதி போராட்டக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் வலிமையானவர்கள்’ என எச்சரிக்கை செய்வது போன்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.  இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் அதே பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பு தொழிலாளி சேத்தன் சைனி (40 வயது) என தெரியவந்துள்ளது. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பத்மாவதி படத்தை எதிர்த்து போரிடும் ராஜ்புத் கர்னி சேனா அமைப்பினர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த அமைப்பின் தலைவர் மகிபால் சிங் கூறுகையில், ‘‘எங்களை பயமுறுத்தப் பார்க்கிறார்கள். எப்படியிருந்தாலும் இது தவறான ஒரு செயல். இதை நியாயப்படுத்த முடியாது’’ என கூறி உள்ளார்.

மூலக்கதை