மே.வங்கத்துக்கு வர இயக்குனருக்கு அழைப்பு: பத்மாவதி திரைப்படத்தை ரிலீஸ் செய்ய மம்தா ஆதரவு

தினகரன்  தினகரன்

கொல்கத்தா: சர்ச்சைக்குரிய பத்மாவதி திரைப்படத்தை ரிலீஸ் செய்ய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,` பத்மாவதி திரைப்படம்  சர்ச்சையில் சிக்கியது துரதிருஷ்டவசமானது. கருத்து சுதந்திரத்தை அழிக்கும் வகையில் கட்சி ஒன்று திட்டமிட்டு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. இதை சினிமா துறையினர் ஒருங்கிணைந்து எதிர்த்து போராட முன்வர வேண்டும்’ என்று பதிவிட்டிருந்தார். கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று அவர் பேசுகையில், ‘‘பத்மாவதி திரைப்படத்தை வேறு மாநிலங்களில் ரிலீஸ் செய்ய முடியாது என இயக்குனர் பன்சாலியும், தயாரிப்பாளரும் நினைத்தால், அவர்கள் மேற்கு வங்கத்தில் ரிலீஸ் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்து தருவேன். இந்த வாய்ப்பு எங்களுக்கு பெருமை தரும் அம்சமாகும். எனவே, அந்த படக்குழுவினர் இங்கு வரலாம். தற்போதைய மத்திய பாஜ ஆட்சியில் ஜனநாயகத்திற்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. எமர்ஜென்சி போன்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. எனவே, எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.

மூலக்கதை