இந்தியா, இலங்கை இடையேயான நாக்பூர் டெஸ்ட் இன்று ஆரம்பம்

தினகரன்  தினகரன்

நாக்பூர் : இந்தியா, இலங்கை இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று துவங்குகிறது. இந்த ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்த டெஸ்டில் ஆரம்பத்தில் இலங்கை ஆதிக்கம் செலுத்தினாலும், கடைசி நாளில் இந்திய வீரர்கள் அசத்தினர். மழை காரணமாக இலங்கை அணி தோல்வியில் இருந்து தப்பியது. இந்நிலையில், 2வது டெஸ்ட் நாக்பூரில் இன்று தொடங்குகிறது.ஈடன் கார்டன் போலவே நாக்பூர் ஆடுகளமும் புற்கள் நிறைந்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இலங்கை தொடர் முடிந்த அடுத்த 2 நாளில் இந்திய அணி தென் ஆப்ரிக்க பயணம் மேற்கொள்கிறது. முக்கியமான அந்த தொடரை கருத்தில் கொண்டு, போதிய கால அவகாசம் இல்லாததால், இப்போதே வீரர்களை தயார் படுத்தும் வகையில் நாக்பூர் ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு முதல் 2 நாட்கள் அதிகளவில் பவுன்சர்கள் எழும்பும். இதனால், வேகப்பந்து வீச்சாளர்களே வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்களாக இருப்பார்கள். கடந்த டெஸ்டில் இந்திய அணியின் ஷிகார் தவான் 2வது இன்னிங்சில் 94 ரன் எடுத்தார். புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி ஆட்டநாயகன் விருது பெற்றார். இவர்கள் இருவருமே அடுத்த 2 டெஸ்டில் இருந்து விலகியுள்ளனர். இது இந்திய அணிக்கு சற்று பின்னடைவு என்றாலும், கொல்கத்தா டெஸ்டில் சரிவிலிருந்து மீண்டு ஆட்டத்தை தங்கள் வசம் கொண்டு வந்ததால் இந்திய அணி நம்பிக்கையுடன் உள்ளது. தவானுக்கு பதிலாக தமிழக வீரர் முரளி விஜய் நீண்ட இடைவெளிக்கு பிறகு துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற உள்ளார். புவனேஸ்வருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனாலும் இவருக்கு 11 பேர் அணியில் விளையாட வாய்ப்பு கிடைப்பது கடினமே. இஷாந்த் ஷர்மா களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. வலுவான பேட்டிங், பந்துவீச்சு வரிசை கொண்டுள்ளதால் முதல் டெஸ்டில் கைநழுவிய வெற்றியை இம்முறை இந்தியா வசப்படுத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்தியா: கோஹ்லி (கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், புஜாரா, ரகானே, சாஹா, அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, விஜய் சங்கர் மற்றும் ரோகித் ஷர்மா. இலங்கை: சண்டிமால் (கேப்டன்), மேத்யூஸ், கருணாரத்னே, டிக்வெல்லா, தனஞ்ஜெயா டி சில்வா, லக்மல், சனகா, பெர்ணான்டோ, கமகே, சன்தகன், சமரவிக்ரமே, தில்ருவன் பெரேரா, ரோஷன் சில்வா.ராசியான மைதானம்நாக்பூர் விதர்பா கிரிக்கெட் ஸ்டேடியம் ஒரு பார்வை...* இதுவரை இங்கு 5 டெஸ்ட் போட்டி நடந்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 3 போட்டியில் இந்தியா வென்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு ஆட்டம் டிரா ஆனது. 2010ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.* இந்தியா 8 விக்கெட்டுக்கு 566 ரன் குவித்ததே (நியூசிலாந்துக்கு எதிராக, 2010) அதிகபட்ச ஸ்கோர். * இந்திய வீரர் சேவக் 4 டெஸ்டில் 357 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 15 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.* கடைசியாக 2015ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்டில் இந்தியா 124 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

மூலக்கதை