கோஹ்லி மீண்டும் விளாசல் அவகாசம் தராமல் இருந்தால் எப்படி...?

தினகரன்  தினகரன்

நாக்பூர் : இலங்கை, தென் ஆப்ரிக்கா ஆகிய 2 முக்கிய தொடர்களுக்கு நடுவே போதிய கால அவகாசம் அளிக்கப்படாதது குறித்து இந்திய கேப்டன் விராத் கோஹ்லி அதிருப்தி தெரிவித்துள்ளார். களத்தில் ஆக்ரோஷமாக ஆடும் விராத் கோஹ்லி, களத்திற்கு வெளியிலும் அதே வேகத்துடன் செயல்படுபவர். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டுக்கு முன்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கோஹ்லி, ‘‘நான் ஒன்றும் ரோபோ இல்லை. என் தோலை கீறிப் பார்த்தால் ரத்தம் வரும். எனக்கும் ஓய்வு தேவைப்படும். அந்த சமயத்தில் நிச்சயம் கேட்டு பெறுவேன்’’ என அதிரடியாக பேசினார். இதே போல, நாக்பூரில் நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் கோஹ்லி வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது: இலங்கை தொடர் முடிந்ததும், அடுத்ததாக தென் ஆப்ரிக்கா தொடருக்கு வெறும் 2 நாட்களே எங்களுக்கு அவகாசம் உள்ளது. இதனால் எங்களுக்கு வேறு வழி இல்லாததால், தென் ஆப்ரிக்கா தொடரை கணித்து இப்போதிலிருந்து தயாராக வேண்டியிருக்கிறது. அதன் காரணமாகவே நாக்பூர் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது.முக்கிய தொடர்களுக்கு நடுவே ஒரு மாத காலம் அவகாசம் இருந்தால், சரியான முறையில் பயிற்சி முகாம் நடத்தி, அடுத்த தொடருக்கு தயாராகலாம். ஆனால் வழக்கம் போல் அவகாசமே இல்லாமல் இருக்கும் நேரத்தை வைத்து தான் செயல்பட வேண்டியிருக்கிறது. இதனால், இலங்கை தொடரையே போதிய வாய்ப்பாக கருதி, எங்களுக்கு நாங்களே சவாலை கொடுத்துள்ளோம். ஒவ்வொரு டெஸ்ட் போட்டி முடிந்ததும் அனைவரும் வீரர்களை மதிப்பிட துவங்கி விடுகின்றனர். ஆனால், நாங்கள் கேட்ட அளவிற்கோ, தயாராக வேண்டிய அளவிற்கோ நேரம் வழங்கப்பட்டதா என்பதை பார்த்த பிறகு, எங்களை விமர்சித்தால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். எனவே, எங்களுக்கு நாங்களே மாறுபட்ட சூழலை உருவாக்கிக் கொண்டுள்ளோம். இந்த மாற்றத்தால் உடனடியாக சிறப்பாக ஆடிவிட முடியும் என கருதவில்லை. ஆனால் 2, 3 இன்னிங்சுக்கு பிறகு சிறப்பாக ஆடினால் அதுவே தன்னம்பிக்கையை அளிக்கும். இனி எதிர்காலத்திலாவது இரு தொடர்களுக்கு இடையே போதிய அவகாசம் அளிப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு இந்திய கிரிக்கெட் வாரியத்தை கோஹ்லி மறைமுகமாக தாக்கி பேசினார். ‘கவனத்தில் கொள்வோம்’கோஹ்லியின் கருத்து குறித்து பதிலளித்த பிசிசிஐ பொறுப்பு தலைவர் சி.கே.கண்ணா கூறுகையில், ‘‘கோஹ்லி இந்திய அணியின் கேப்டன். அவரது கருத்தை நாங்கள் தீவிரமாக கவனத்தில் கொள்வோம். இந்திய அணியின் செயல்பாட்டை எண்ணி நாங்கள் பெருமை கொள்கிறோம். அதே நேரத்தில் வீரர்கள் களைப்படைந்ததாக உணர்ந்தால், அந்த விஷயத்தை விசாலமான பார்வையுடன் அணுகுவோம்’’ என்றார்.

மூலக்கதை