எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது ஏன்?

PARIS TAMIL  PARIS TAMIL
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது ஏன்?

83 பக்கங்களை கொண்ட தேர்தல் கமிஷன் தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒருங்கிணைந்த அ.தி.மு.க. வின் அவைத்தலைவரான மதுசூதனன் உள்ளிட்டோர் தரப்பிலும், சசிகலா உள்ளிட்டோர் தரப்பிலும் தங்களுக் கான ஆதாரமாக பாராளுமன்றம், டெல்லி மேல்-சபை மற்றும் தமிழக சட்டசபையில் உள்ள உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதன்படி, மதுசூதனன் உள்ளிட்டோர் தரப்புக்கு பாராளுமன்ற மக்களவையைச் சேர்ந்த 34 உறுப்பினர்களும், டெல்லி மேல்-சபையைச் சேர்ந் 8 உறுப்பினர்களும், தமிழக சட்டசபையில் உள்ள 111 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளனர். புதுச்சேரி அ.தி.மு.க.வில் 4 எம்.எல்.ஏ.க் களின் ஆதரவும் இந்த அணியினருக்கே உள்ளது.

எதிர் மனுதாரர் சசிகலா உள்ளிட்டோர் தரப்புக்கு ஆதரவாக பாராளுமன்ற மக்களவையைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும், டெல்லி மேல்-சபையைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும், தமிழக சட்டசபையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து பிரமாண பத்திரம் அளித்து உள்ளனர்.

மேற்கண்ட ஆதரவு உறுப்பினர்கள் எண்ணிக்கையானது, மதுசூதனன் உள்ளிட்டோருக்கு சந்தேகமின்றி சாதகமாக உள்ளது. அவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட ஆதரவு பட்டியல் குறித்து எதிர்மனுதாரர்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை. எனவே, மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அணிக்கே பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என்பது தெளிவாக புலனாகிறது.

இதன் அடிப்படையில் மனுதாரர்களான, மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எஸ்.செம்மலை மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அடங்கிய அணியானது, அ.தி.மு.க. வில் அமைப்பு ரீதியாகவும் பாராளுமன்ற மற்றும் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் பெரும்பான்மை ஆதரவை பெற்று உள்ளது. எனவே, மதுசூதனன் உள்ளிட்டோர் தலைமையிலான அணி, தேர்தல் சின்னம் ஒதுக்கீடு சட்டம் 1968-ன் படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் அங்கீகாரம் பெற்ற கட்சியாக விளங்கும்.

கடந்த 1970-ம் ஆண்டில் இருந்து தேர்தல் சின்னம் தொடர்பான வழக்குகளை முடிவு செய்யும் விஷயத்தில், சாதிக் அலி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கருத்தில் கொண்டு அமைப்பு ரீதியாகவும், பாராளுமன்றம் மற்றும் சட்டசபையில் உள்ள பெரும்பான்மையை கணக்கில் எடுத்தும் தேர்தல் கமிஷன் முடிவெடுத்து உள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 16-ல் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, மற்றும் நவம்பர் 17-ல் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தொடர்பான வழக்குகளிலும் பெரும்பான்மையை கருத்தில் கொண்டுதான் தேர்தல் கமிஷன் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

அதன்படி மதுசூதனன் தலைமையிலான இந்த அணி, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரையும் அதற்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தையும், கட்சியின் கொடியையும் பயன்படுத்துவதற்கு உரிமை பெற்ற அணி ஆகிறது.

எனவே, இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதியன்று தேர்தல் கமிஷன் பிறப்பித்த உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது.

இவ்வாறு தேர்தல் கமிஷன் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை