சென்னையில் 3 உயர்மட்ட சாலைகள் அமைக்கப்படும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி

PARIS TAMIL  PARIS TAMIL
சென்னையில் 3 உயர்மட்ட சாலைகள் அமைக்கப்படும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி

மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி, சென்னையில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி நிதின் கட்காரி அளித்த பேட்டி வருமாறு:-

சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ.22 கோடி செலவில் தாம்பரம்-வண்டலூர், ரூ.50 கோடி செலவில் வண்டலூர்- கூடுவாஞ்சேரி இடையே சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளது.

சென்னையில் 3 உயர்மட்ட சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.2,250 கோடி செலவில் தாம்பரம்- செங்கல்பட்டு, ரூ.1,500 கோடியில் பூந்தமல்லி-மதுரவாயல், ரூ.1,000 கோடியில் சென்னை புறநகர்-நங்கநல்லூர் இடையே உயர்மட்ட சாலை அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை 6 மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்டு உடனடியாக பணிகள் தொடங்கிவிடும்.

சென்னை-பெங்களூரு இடையேயான தொழில்வழிச் சாலையை 6 வழிச்சாலையாக அமைக்க ரூ.1,500 கோடி அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். நாடு முழுவதும் 12 விரைவுச் சாலைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையும் ஒன்று.

தமிழகத்தில் நில ஆர்ஜிதம் விரைவில் முடிய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். 80 சதவீத நிலம் கிடைத்ததும் விரைவுச் சாலை அமைக்கும் பணியை தொடங்கிவிடுவோம். அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் இந்தப் பணிகள் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.

திருவள்ளூர் பைபாஸ் சாலை அமைப்பது புதிய திட்டமாகும். சென்னை-திருப்பதி இடையே சாலை அமைப்பதும் விரைவுபடுத்தப்படும். சென்னை-தடா இடையே ரூ.5 ஆயிரம் கோடியிலும், பூந்தமல்லி-வாலாஜாபாத் இடையே ரூ.1,500 கோடியிலும் சாலை அமைக்க திட்டம் தயாராக உள்ளது. 3 அல்லது 4 மாதங்களில் இந்தத் திட்டங்கள் தொடங்கிவிடும்.

மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்குகிறது. தமிழகத்தில் புதிதாக 1,300 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் 453 கி.மீ. நீளத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.

இந்திய அளவில் 5 லட்சம் விபத்துகளும், அதில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இறப்புகளும் நிகழ்கின்றன. 2020-ம் ஆண்டுக்குள் இதனை 50 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 61 அதிக விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்துள்ளோம். அவை அப்புறப்படுத்தப்படும். இதற்காக ரூ.2,300 கோடி ஒதுக்கப்படுகிறது.

மாநில சாலைகளுக்காக கூடுதல் நிதியாக ரூ.500 கோடி அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. தொழில்கள் வளர்ச்சிக்காக தமிழகத்தில் நெமிலி மற்றும் மப்பேடில் லாஜிஸ்டிக் (சரக்கு தளவாடங்கள்) பூங்கா தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம்.

தமிழக துறைமுகங்களை தொழில்மயமாக்க, குறிப்பாக ஏற்றுமதியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். இலங்கைப் பகுதிக்கு செல்லாமல் வேறு பகுதிகளில் மீன்பிடிக்க 25 முதல் 30 டிராலர் படகுகளை தமிழகத்துக்கு வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். எண்ணூர், தூத்துக்குடியில் கடற்கரை வேலைவாய்ப்பு மண்டலங்களை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக எண்ணூரில் 315 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

12 கடல்மைல் தூரம் வரை சென்று மீன்பிடிக்கும் நிலையில் இருந்து மாறி, 30 கடல் மைல் தூரத்துக்கும் அதிகமாகச் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்கும் உபகரணங்கள் தேவைப்படுகிறது. அதற்குத் தேவைப்படும் படகுகளை தமிழக மீனவர்களுக்கு அளிக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.

ஒரு படகின் விலை ரூ.80 லட்சம். இதற்கு முதல்கட்டமாக ரூ.200 கோடி ஒதுக்கப்படுகிறது. 250 படகுகளை சர்வதேச தரத்தில் தயாரித்து தரவுள்ளது. இதன் மூலம் மீன்பிடிப்பை 4 மடங்கு அதிகரிக்க முடியும்.

சென்னையில் இருந்து கடல் மார்க்கமாக புதுச்சேரிக்கு கன்டெய்னர்களை கொண்டுசெல்லும் நடவடிக்கை விரைவில் தொடங்க உள்ளது. எனவே சென்னையில் கன்டெய்னர் போக்குவரத்தில் உள்ள நெரிசல் குறையும்.

மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை இன்னும் 3 மாதங்களில் கிடைக்கும். பின்னர் அதற்கான பணிகள் தொடங்கும். சென்னையில் உள்ள காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை.

சேது சமுத்திரம் திட்டம் தொடர்பான பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் அடுத்த விசாரணையில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவுள்ளது. அப்போது அதில் மத்திய அரசின் நிலைப்பாடு தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை