'வீடியோ' உண்மை தான்: மீண்டும் உயிர் பெறும் உல்லாச வழக்கு

தினமலர்  தினமலர்
வீடியோ உண்மை தான்: மீண்டும் உயிர் பெறும் உல்லாச வழக்கு

பெங்களூரு: 'திரைப்பட நடிகை ஒருவருடன், நித்யானந்தா உல்லாசமாக இருப்பது போல், ஏழு ஆண்டுகளுக்கு முன் வெளியான, 'வீடியோ' உண்மையானது தான்' என, டில்லி தடயவியல் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு பிடதியில் உள்ள ஆசிரமத்தில், திரைப்பட நடிகை ஒருவருடன், நித்யானந்தா, உல்லாசமாக இருந்த வீடியோ காட்சிகள், 2010ல், மீடியாக்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, நித்யானந்தா தலைமறைவானார். அவருக்கு சொந்தமான, ஆசிரமங்கள் முன், மக்கள் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையில், திருவண்ணாமலை அருகே, நித்யானந்தாவை, கர்நாடக போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, 'தனக்கு ஆண்மையே இல்லை; வீடியோவில் இருப்பது தான் இல்லை; அந்த வீடியோ போலியாக சித்தரிக்கப்பட்டது' என, நித்யானந்தா வாதாடினார். ஆனால், ஆண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின், ஜாமினில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கை, சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய, 'சிடி'யை டில்லி யிலுள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு, போலீசார் அனுப்பி வைத்தனர். தற்போது, ஏழு ஆண்டுகளுக்கு பின், சி.ஐ.டி.,க்கு, தடயவியல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், 'வீடியோவில் இருப்பது, நித்யானந்தா தான்' என, உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், உல்லாச வழக்கு, மீண்டும் உயிர் பெற்று உள்ளது.

மூலக்கதை