அரசு பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றம்... முடங்கியது! 3 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு நிறுத்தம்

தினமலர்  தினமலர்
அரசு பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றம்... முடங்கியது! 3 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு நிறுத்தம்

உடுமலை : பள்ளிகளில் செயல்படும், சுற்றுச்சூழல் மன்றத்துக்கு நிதி ஒதுக்கீடு மூன்றாண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளதால், மன்ற செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், மாணவர்களுக்கு பசுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மாநில அரசின் சார்பில் சுற்றுச்சூழல் மன்றம் துவக்கப்பட்டது.இயற்கையை பாதுகாப்பது, மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இத்திட்டத்தின் நோக்கம். மத்திய அரசின் சார்பில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும், மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது.அடிப்படை செயல்பாடுகள் பள்ளிகளில் காய்கறி மற்றும் மூலிகைத்தோட்டம் அமைப்பது, மாணவர்களுக்கு, காலநிலை மற்றும் இயற்கையின் இன்றியமையாமை குறித்து செயல்முறை விளக்கமளிப்பதும் இத்திட்டத்தின் அடிப்படையான செயல்பாடுகளாக உள்ளன.சுகாதாரத்தை மேம் படுத்துவது, சுற்றுச்சூழல்மாசுபடுவதை தடுப்பது, பிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைப்பது, துாய்மை இந்தியா, தன் சுத்தத்தை மாணவர்களை பின்பற்ற செய்வதும் இத்திட்டத்தின் முக்கிய செயல்பாடுகளாகும்.நிதி ஒதுக்கப்படவில்லைஇதற்கென, ஒவ்வொரு பள்ளிக்கும், ஐந்தாயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 359 பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் செயல்படுகின்றன. கடந்த, 2014-15, 2015-16, 2016-17 என மூன்றாண்டுகளாய், இத்திட்டத்துக்கான நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை.பள்ளிகளில் தோட்டம் அமைப்பது மற்றும் இயற்கையை பாதுகாக்கும் நடவடிக்கைகளில், மாணவர்கள் அதிக ஆர்வத்தோடு ஈடுபட்டனர். ஆனால், நிதி ஒதுக்கீடு இல்லாததால் மன்றத்தின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.மத்திய அரசின் பசுமைப்படை திட்டம் பள்ளிகளில் முழுவதுமாய் செயல்படுகிறது. ஆனால், மாநில அரசின் சார்பில் செயல்படும் இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், பள்ளி நிர்வாகத்தினர் அதிருப்தியில் உள்ளனர்.திட்டத்தில் மாணவர்கள் முழுமையாக களமிறங்கிய பின்னர், அதற்கான நிதி ஒதுக்கீடு இல்லாமல் மீண்டும் முடங்குவதால், அவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.தகவல் பரப்பு மையம்திருப்பூர் மாவட்டத்தில், சுற்றுச்சூழல் துறை தகவல் பரப்பு மையம் என உடுமலையில் ஒரு பள்ளியில் துவக்கப்பட்டது. நிதி ஒதுக்கீடு இல்லாததால், மையத்தின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.நிதி ஒதுக்கீடு, மூன்றாண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளதால், தன்னார்வலர் மூலமே, பள்ளிகளில் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.இருப்பினும், ஒரு சில செயல்திட்டங்களை மட்டுமே செயல்படுத்த முடிகிறது. திட்டத்தின் முழுமையான நோக்கம் மாணவர்களை சென்றடையவில்லை. காய்கறித்தோட்டங்களை பராமரிப்பதற்கும், அடுத்தகட்ட செயல்முறைகளுக்கும் நிதி இல்லாததால், பாதியில் முடங்குகிறது.இதனால் மாணவர்களின் ஆர்வமும் குறைகிறது. அரசு நிதி ஒதுக்கீடு செய்வதனால் மட்டுமே, பள்ளிகளில் இத்திட்டம் தொடரும் நிலை உள்ளது.
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு பாடங்கள் நடத்துவது மட்டுமின்றி, அதற்கான செயல் நடவடிக்கை இருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு அது பயனுள்ள திட்டமாகும். நிதி ஒதுக்கீடு மூன்றாண்டுகளாக தாமதமாவதால், பல பள்ளிகளிலும், மன்றங்களை நீக்க திட்டமிட்டுள்ளனர். திட்டங்கள் துவக்கப்படுவதோடு நின்றுவிடாமல், இதை தொடர்ந்து செயல்படுத்தவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை