பாரம்பரியமான ஆஷஸ் தொடர் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

தினகரன்  தினகரன்

பிரிஸ்பேன் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளிடையேயான பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் காபா ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 5.30க்கு தொடங்கி நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, மொத்தம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மோதுகிறது. 2015க்கு பிறகு நடக்கும் இந்த தொடரில் இரு அணிகளுமே புதிய கேப்டன்களின் தலைமையில் களமிறங்குகின்றன. ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள பந்த்வீச்சாளர்களில் ஸ்பின்னர் நாதன் லயன் மட்டுமே சொந்த மண்ணில் ஆஷஸ் டெஸ்டில் விளையாடிய அனுபவம் உள்ளவர்.அதே சமயம், ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியில் அந்நாட்டுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடு என இரண்டு அனுபவ பந்துவீச்சாளர்கள் உள்ளனர். மதுபான விடுதியில் ரகளையில் ஈடுபட்டதால் வழக்கில் சிக்கியுள்ள அதிரடி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது, அந்த அணிக்கு சற்று பின்னடைவு தான். ஆஸி. அணி கடைசியாக விளையாடிய 5 டெஸ்டில் 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ள நிலையில், இங்கிலாந்து 4 வெற்றி, 1 தோல்வியுடன் சற்று தெம்பாகவே உள்ளது.  1988க்கு பிறகு காபா மைதானத்தில் தோற்றதில்லை என்ற வரலாறு ஆஸி.க்கு உற்சாகமளிக்கும். வேகத்துக்கு சாதகமான பிரிஸ்பேன் ஆடுகளத்தில் ஆஸ்திரெலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட் கூட்டணியை சமாளிப்பது இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். அதே போல ஆண்டர்சன், பிராடு, வோக்ஸ், ஜேக் பால் என இங்கிலாந்து அணியிலும் வேகத்துக்கு பஞ்சமில்லை. வார்னர், கவாஜா, ஸ்மித் பெரிய ஸ்கோர் அடித்தால் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். அலஸ்டர் குக், ஜோ ரூட், மொயீன் அலி போன்றவர்களை கட்டுப்படுத்துவது ஆஸி. பவுலர்கள் முன் உள்ள சவால். மொத்தத்தில், சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த டெஸ்ட், கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மூலக்கதை