இந்தியாவில், முதல் முறையாக போர் விமானத்தில் இருந்து செலுத்தப்பட்ட அதிவேக ஏவுகணை சோதனை வெற்றி

PARIS TAMIL  PARIS TAMIL
இந்தியாவில், முதல் முறையாக போர் விமானத்தில் இருந்து செலுத்தப்பட்ட அதிவேக ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவில் முதல் முறையாக சுகோய் போர் விமானத்தில் இருந்து செலுத்தப்பட்ட பிரமோஸ் அதிவேக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.
கூட்டுத் தயாரிப்பு

இந்திய ராணுவத்தில் சேர்ப்பதற்காக மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் பல்வேறு வித ஏவுகணைகளை தயாரித்து சோதனை நடத்தி வருகிறது.

அந்த வகையில் ரஷியாவின் என்.பி.ஓ. மசினோஸ்ட்ரேயெனியா கழகத்துடன் இணைந்து பிரமோஸ் அதிவேக (சூப்பர்சோனிக்) என்னும் நவீன ஏவுகணை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலம் பலாசூர் அருகே வங்காள விரிகுடா கடல் பகுதியில் நேற்று நடத்தப்பட்டது.
துல்லியமாக தாக்கியது

அப்போது இந்திய விமானப்படையின் சுகோய்–30 ரக போர் விமானத்தில் இருந்து 2.4 டன் எடை கொண்ட பிரமோஸ் அதிவேக ஏவுகணை வங்காள விரிகுடா கடலில் உள்ள இலக்கை நோக்கி செலுத்தப்பட்டது.

சக்திவாய்ந்த இந்த ஏவுகணை கடலில் 300 கிலோ மீட்டர் தொலைவில் வைக்கப்பட்டு இருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.

இதுபற்றி ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:–
உலகின் முதல் அதிவேக ஏவுகணை

இரு கட்டங்களாக செயல்படும் பிரமோஸ் அதிவேக (சூப்பர்சோனிக்) ஏவுகணையில் 300 கிலோ வரை ஆயுதங்களை எடுத்துச்செல்ல இயலும். சுகோய் போர் விமானத்தில் இத்தகைய ஏவுகணை சோதனை இந்தியாவில் முதல் முறையாக நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. மேலும் உலகிலேயே அதிவேகத்தில் சென்று தாக்கும் முதல் ஏவுகணை இதுவாகும்.

வழக்கமாக விமானத்தின் கீழ்ப்பகுதியில் பொருத்தப்படும் ஏவுகணை அங்கிருந்தே கிளம்பி தாக்கி அழிக்கவேண்டிய இலக்கை நோக்கி செல்லும். இந்த ஏவுகணை விமானத்தின் கீழாக விடுவிக்கப்பட்டு, அதன்பின்னர் இலக்கை நோக்கி செல்லும் விதமான தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஏவுகணையை தரை, கடல், வான் என 3 பகுதிகளில் இருந்தும் செலுத்தமுடியும். ஒலியின் வேகத்தை விட சுமார் 2.8 மடங்கு வேகத்தில் (மணிக்கு 3,457 கி.மீ. வேகம்) இந்த ஏவுகணை பாய்ந்து செல்லும். பிரமோஸ் அதிவேக ஏவுகணை சோதனை திட்டம் வெற்றி பெற்று இருப்பதன் மூலம் இந்திய விமானப்படை மேலும் வலுப்பெற்று இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை