இனியாவது, நடிகர்கள் சம்பளம் குறையுமா ?

தினமலர்  தினமலர்
இனியாவது, நடிகர்கள் சம்பளம் குறையுமா ?

திரையுலகத்தில் நடிகைகள் தற்கொலை தான் அதிகமாக இருந்தது. காதல் தோல்வி, குடும்ப நெருக்கடி என சில தனிப்பட்ட பிரச்சனைகளால் பல முன்னணி ஹீரோயின்கள் கூட தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அவை பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும். உடனே நடிகர் சங்கத்தினர், கூடிப் பேசி நடிகைகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கப் போகிறோம் என்று சொல்வார்கள். அது மாதிரி இதுவரை எத்தனை கவுன்சிலிங் நடந்தது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

தயாரிப்பாளர்களில் கடன் தொல்லை காரணமாக பல வருடங்களுக்கு முன்பு பிரபலத் தயாரிப்பாளரான ஜி.வி. தற்கொலை செய்து கொண்டார். அதற்கும் அன்புசெழியன் தான் காரணம் என திரையுலகத்தில் பேசிக் கொண்டார்கள். அதே அன்புசெழியன்தான் தற்போது தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்குக் காரணம் என்பதை அவரே எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் சம்பளம் குறையுமா?
இன்று காலை முதலே சமூக வலைத்தளங்களில் இது பற்றிய விவாதம் தான் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. பலரும் ஒரே கருத்தாக நடிகர்களின் சம்பளத்தைக் குறைப்பது பற்றி இதுவரை பலரும் பேசியுள்ள நிலையில் நடிகர் சங்கம் சார்பாக அது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லையே என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஒரு படத்தின் தயாரிப்புச் செலவில் 50 சதவீதம் வரை நடிகர்களின் சம்பளத்திற்கே சரியாகப் போய்விடுகிறது. அதன்பின் படத் தயாரிப்புச் செலவு, விளம்பரச் செலவு என பல செலவுகள் அவர்களது கழுத்தை நெறிக்கிறது.

கட்டப்பஞ்சாயத்து
பின்னர் படத்தை வெளியிடலாம் என்றால் கூட்டமைப்பு என்று கூறிக் கொண்டு சிலர் அவர்களது படத்து நாயகனின் முந்தைய படத் தோல்விக்கு இந்தப் படத்தைப் பிரச்சனைகளில் சிக்க வைப்பார்கள். திரையுலகத்தில் கந்துவட்டி போலவே கட்டப் பஞ்சாயத்தும் அதிகமாக இருக்கிறது என்பதே பல தயாரிப்பாளர்களின் குற்றச்சாட்டு.

6 பேர் தான் பிரச்னை
தற்போது விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்தினர், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களின் அதிகாரத்தை அடக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாகவே ஈடுபட்டு வருகிறார்களாம். ஆறு பேர் தான் திரையுலகத்தில் பிரச்சனை செய்பவர்கள். அந்த ஆறு பேரை கட்டுப்படுத்தி விட்டால் திரையுலகத்தைக் காப்பாற்றிவிடலாம் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

அப்படியே பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு இவ்வளவு தான் சம்பளம் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு முடிவு எடுத்தால் புதிதாக படம் எடுக்க வருபவர்களும் காப்பாற்றப்படுவார்கள் என்கிறார்கள். பெப்சி தொழிலாளர்களுடன் பிரச்சனை ஏற்பட்ட போது அவர்கள் இல்லாமல் படம் எடுக்கலாம் என்று களத்தில் இறங்கிய தயாரிப்பாளர் சங்கம், கோடிக்கணக்கான சம்பளம் வாங்கும் நடிகர்கள் அவர்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என குறைந்தபட்சம் அறிக்கை கூட வெளியிடுவதில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் திரையுலகத்தைக் காப்பாற்றாவிட்டால், இனிமேலும் தொடர்ந்து படங்களைத் தயாரிப்பது என்பது தானே தேடிப் போய் குழியில் விழுவதற்குச் சமம் என்றே பலரும் கருதுகிறார்கள்.

மூலக்கதை