ஜிம்பாப்வே அதிபராக பதவியேற்கிறார் மங்காக்வா

தினமலர்  தினமலர்
ஜிம்பாப்வே அதிபராக பதவியேற்கிறார் மங்காக்வா

ஹராரே: தென் ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயின் அடுத்த அதிபராக, முன்னாள் துணை அதிபர், எம்மர்சன் மங்காக்வா, 75, நாளை பதவியேற்க உள்ளார்.
தென் ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில், 37 ஆண்டுகளாக, ராபர்ட் முகாபே, 93, ஆட்சி புரிந்து வந்தார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஊழலை எதிர்த்து, பல மாதங்களாக, மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது; முகாபே, வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கை, பார்லிமென்டில் நேற்று முன்தினம் துவங்கியது.
அப்போது, அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக, ராபர்ட் முகாபே, ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், முகாபேவால் துணை அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட, எம்மர்சன் மங்காக்வா, ஆளும் இசட்.ஏ.என்.யு.பி.எப்., கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை அடுத்த அதிபராக நியமிக்க, ராணுவம் மற்றும் ஆளும் கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, புதிய அதிபராக, மங்காக்வா, நாளை பதவியேற்க உள்ளார்.

மூலக்கதை